January 20, 2021

தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தடை விதிப்பது தவறான செயல்…

1 min read

இந்நிலையில், நாம் அந்த பிரன்ஸ் ஆப் போலீசின் அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள சிறிது பின்னோக்கி சென்று பார்க்க வேண்டியது உள்ளது. இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு 1993 ஆம் ஆண்டு தூக்கப்பட்டது.
இந்த அமைப்பை துவக்கியவர், அன்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பிரதீப் வி பிலிப் என்ற ஒரு போலீஸ் அதிகாரி ஆவார். அவர் அந்த மாவட்டத்தில் 90 களில் இருந்த பல குற்றச் செயல்கள் இருந்து மக்களைக் காக்க வேண்டி இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை 1993ல் துவக்கினார். அந்த அமைப்பின் சிறந்த செயல்பாட்டை பார்த்த தமிழக முதல்வர் முதல், உலகம் முழுவதும் உள்ள அனைவருடைய பாராட்டுப் பெற்றுது. அதன்பிறகுதான் அந்த அமைப்பு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் பல மக்களுக்குப் பயன்படக்கூடிய செயல்கள் கடைபிடிக்கப்பட்டது.
உதாரணத்திற்கு இந்த அமைப்பை துவங்கிய காவல்துறை உயர் அதிகாரி பிரதீப் வி பிலிப் அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆக இருந்தபோது பொதுமக்கள் அதிக அளவில் தவறான நிதி நிறுவனங்கள் மற்றும் திடீரென முளைக்க கூடிய ஈமு கோழி வளர்ப்பு திட்டம், மரம் வளர்ப்பு திட்டம், கொப்பரை தேங்காய் வளர்ப்பு திட்டம், போன்ற பல தவறான கூட்டங்களிடம் மக்கள் முதலீடு செய்து அதிக அளவில் பாதிக்கப் பட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொது மக்களுக்கு உதவ வேண்டி, அந்த போலீஸ் அதிகாரி ஒரு புதிய அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பில் நுண் அறிவு துறை போலீசார், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர்கள், என பல தரப்பினரும்
ஒன்றிணைய செய்து மக்களுக்கு, அவர்கள் பகுதியில் இருக்கக்கூடிய முதலீட்டு நிறுவனங்களை கண்காணிக்க செய்தார். இதன்மூலம் மக்கள் பெரிய அளவில்
பயனடைந்தனர். மேலும் இதுபோல பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் பல விதமான சேவைகள் தொடர்ந்து இருந்ததால் தான்,
2019ஆம் ஆண்டு காவல் துறை இயக்குனராக இருந்த பிரதீப் வி பிலிப் அவர்களுக்கு “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்”, மற்றும் “உங்கள் குற்றவாளிகளை தெரிந்துகொள்ளுங்கள்” போன்ற அமைப்பை துவக்கி, அவைகளை சிறப்பாக செயல்படுத்தி கொண்டு இருப்பதற்காக, டெல்லியில், இரண்டு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டது.

இது போன்ற பல உயரிய நோக்கத்திற்காக துவக்கப்பட்ட பலருடைய பாராட்டுகளைப் பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்ட இந்த அமைப்பு, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு பல தவறான நபர்கள் இந்த அமைப்பினுள் ஊடுருவியதாலும், பின்னர் அவர்கள் அந்த அமைப்பை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்ளும் சூழல் அமைந்ததாலும்,
பல குற்ற சம்பவங்கள் நடக்கத் துவங்கின. இதை நான் உட்பட யாரும் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு 2008ஆம் ஆண்டு இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், அதன் பெயரை போலீஸ் நண்பர்கள் குழு என மாற்றம் செய்ய வேண்டும் எனவும், மாற்றி செயல்பட செய்ய வேண்டும் என்ற ஒரு சூழல் நிலவியது. அந்த சமயத்தில் “உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, சந்துரு” அவர்கள் கூட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குறித்து காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும். என உத்தரவிட்டு இருக்கிறார். இப்படி சாமானிய மக்கள் முதல் நீதிபதி வரை குற்றம் சொல்லும் அளவிற்கு அந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்னுடைய செயல்பாடுகள் தலைகீழாக தவறான பாதையில் போனது உண்மை.

அதிலும், சாத்தான்குளத்தில் தந்தை, மகன்டைய மரணத்திற்கு பிறகு பிரண்ட்ஸ் ஆப் போலீசின்மீது மக்களுடைய எண்ணமும், பார்வையும், மிகவும் மோசமாக உள்ளது. அதனால் தான், இன்று காலையில் இருந்து சில மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும், என்று போலீஸ் உயர் அதிகாரிகளே அறிவித்து இருக்கின்றனர். இந்நிலையில் சாத்தான்குளத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினருடைய நிர்வாகி லூர்துசாமி கூறுகையில், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு போலிசார் ஜெயராஜ் அவரிடையட மகன் பெனிக்ஸ் இருவரையும் கைது செய்து காவல் நிலைத்திற்க்கு அழைத்து வந்த போது எங்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினுடைய உறுப்பினர்கள் ஒருவர் கூட அங்கு இல்லை, என அடித்துக் கூறியிருக்கிறார். உண்மை நிலை இப்படி இருக்க போலீஸ் உயரதிகாரிகள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும், என கூறிவருவதை பார்க்கும் போது, அவர்களை தாக்கிய அன்று இரவு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசை தவிர வேறு யாரோ இருந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் வாழ்வுரிமை கட்சியின் தலைவர், வேல்முருகன் மற்றும் பலர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு அங்கமான சேவபாரதி அமைப்பினர் அங்கு இருந்திருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. இதையெல்லாம் உன்னிப்பாக பார்க்கும் போது, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு நமக்கு தேவை தான். ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்கள் 2008ஆம் ஆண்டு கூறியது போல் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை ஆய்வு செய்து அதை ஒழுங்குபடுத்த வேண்டும். அதை விட்டு விட்டு அந்த அமைப்பிற்கு முழுமையாக மூடுவிழா நடத்துவது தவறு.

குறிப்பாக பிரண்ட்ஸ் ஆப் போலீசை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றால், உதாரணத்திற்கு, ஒவ்வொரு இளைஞர்களும் 18வயது துவங்கியவுடன் கண்டிப்பாக ஒரு வருடத்திற்கு வாரம் ஒரு நாள், அவர்கள் வீடு இருக்கக்கூடிய பகுதியில் இயங்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவில் அவர்கள் பணியாற்ற வேண்டும். அதற்கு முன்பாக அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை பயிற்சி, மற்றும் சாலை விதிகள், குற்ற சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வுகள், போன்ற அடிப்படைத் தேவைகள் பற்றிய பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
மேலும் அந்தக் குழுவினர் போலீஸ் வாகனத்திலோ, அல்லது காவல் நிலையத்திலோ, போலீஸ்காரர்களுக்கு எடுபுடி போல் சுற்றக்கூடாது. என்பதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதுபோன்று வழிமுறைகளை அமைக்க செய்து, பிரண்ட் போலீஸ் குழுவை ஒழுங்குபடுத்தினால், இளைஞர்களுடைய எண்ணாங்களும், நன்றாக இருக்கும். பொதுமக்களும் பயனடைவார்கள். இதை செய்வதை விட்டு,விட்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவிற்கு தடை விதிப்பது என்பது தவறான செயல்…

 - G.பாலகிருஷ்ணன்
      - நிழல்.இன் 
       8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *