திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை விளையாட்டு மைதானமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தாராட்சி ஊராட்சிக்குட்பட்ட தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, விளையாட்டு மைதானமாக மாற்றும் பணிகளை ஊராட்சி நிர்வாகம் துவக்கியது. இதற்காக டிராக்டர் மற்றும் வாகனங்களில் வந்த ஊராட்சி பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த, தொம்பரம்பேடு கிராம மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி, டிராக்டரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை விளையாட்டு மைதானமாக மாற்றி விட்டால், தங்களது கிராமத்தில் உள்ள கால்நடைகள் மேய்ச்சலுக்கு எங்கு செல்லும் ” என, கேள்வி எழுப்பினர். “ஆடு, மாடுகளை மட்டுமே அதிகளவில் நம்பி வாழ்ந்து வரும் நிலையில் மேய்ச்சல் நிலத்தை மைதானமாகமாற்ற அனுமதிக்க முடியாது.” என திட்டவட்டமாக தெரிவித்தனர். பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை போலீசார், ” வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சென்று முறையிடுமாறும் அதுவரையில் பணிகள் மேற்கொள்ளப்படாது.” என உறுதியளித்தனர் அதை கேட்ட பின்னர், கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.