திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், முதியவர் ஒருவர் கேட்பாரற்று, வெயிலில் அமர்ந்தபடி நாவரண்டு சோர்ந்த நிலையில் உடல் முழுதும் தோல் நோயால் பாதிக்கப்பட்டும் இருந்தார். அப்போது, அவ்வழியாக மக்கள் குரல் செய்தியாளர், பழவை முத்து உள்ளிட்ட சில பத்திரிகையாளர்கள் சென்றுள்ளனர். உடனே அவர்களை பார்த்து அந்த முதியவர் கையசைத்து கூப்பிட்டு, தான் 5 நாட்களாக இதே இடத்தில் மிகவும் துன்பப்பட்டு கிடப்பதாகவும், உதவிக்கு பலபேரின் அணுகியும் யாரும் உதவி செய்யவில்லை எனவும், இதே நிலை இன்னும் இரண்டு நாட்கள் நீடித்தால், தான் இறந்துவிடக்கூடும் எனவும், மிகவும் உருக்கமாக கூறி, நீங்கள் எனக்கு உதவும் வாய்ப்பு உள்ளவர்கள் அதனால் தான் உங்களை அழைத்தேன், என தெளிவாக பேசியுள்ளார்.இதனை கேட்ட, பத்திரிக்கையாளர்கள் உடனடியாக கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜு அவர்களை தொலைபேசியில் அணுகி, முதியவர் குறித்த தகவலை அளித்தனர். மனிதநேயமிக்க மருத்துவரான அவர், உடனடியாக தனது மருத்துவ பணியாளர்களை பேருந்து நிலையத்தில் பெரியவர் இருந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஆம்புலன்ஸ் ஏற்பாட்டையும் செய்தார். இந்த நிலையில் பெரியவருக்கு உதவி செய்ய நீதித்துறை மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகளும் சேர்ந்துகொள்ள அனைவருமாக பெரியவரை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி அனுப்பி வைக்க உதவினர். கும்மிடிப்பூண்டி காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் சில கையுறைகள், முகக் கவசங்கள் முதலிவற்றை அளித்து பண உதவிகளும் செய்து, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனைவருமாக சேர்ந்து அனுப்பி வைத்தனர். பெரியவர் கண்ணீர்மல்க இனி தான் காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் கையசைத்து விடை பெற்றுச் சென்றார். இந்த மனித நேய செயல் அங்கிருந்த பொதுமக்களை மனம் நெகிழச் செய்தது. இந்த மனிதநேய செயலை செய்த பத்திரிக்கையாளர்கள் மக்கள்குரல் பத்திரிக்கை நிருபர் பழவை. முத்து, கேப்டன் டி.வி. செய்தியாளர் மகேஷ், தினபூமி பத்திரிக்கை நிருபர் யாக்கோபு, ஒன்.எஸ்.டி.வி. செய்தியாளர். விக்டர், இ. டி.வி . செய்தியாளர் சுரேஷ், உள்ளிட்ட பத்திரிகையாளர்களை அங்கிருந்த பொது மக்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டி நன்றிகளை தெரிவித்தனர்.