திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், ஜகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் பழவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவ, மாணவிகள் பயன்படுத்துவதற்காக 40க்கும் மேற்பட்ட லேப்டாப்கள் பள்ளியில் உள்ள கணினி அறையில் வைக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கால் மாதக்கணக்கில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், தினமும் இரவில் காவலாளி முக்குந்தய்யன் மட்டும் பணியில் இருப்பது வழக்கம்.இந் நிலையில், நேற்று இரவு 5 பேர் கொண்ட கும்பல் பள்ளியில் புகுந்து, காவலாளியை கை, கால்களை கட்டியும் மேலும் அவர் வாயில் துணியை திணித்து கட்டியும் போட்டுவிட்டு, கணினி அறையில் இருந்த லேப்டாப்கள் மற்றும் டிவிகளை திருடிச் சென்றுள்ளனர். வெகு நேரம் கழித்து காவலாளியின் முனகல் சத்தத்தை கேட்ட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவலாளியை மீட்டு பின் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். திருப்பாலைவனம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்து ஏழை பிள்ளைகளின் கல்வி வளச்சிக்காக, அரசும், சமூக ஆர்வலர்களும் வழங்கிய பொருட்களை திருடி சென்ற திருட்டு கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.