தமிழக முதல்வர், கொரோனா ஆய்வு கூட்டத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை புறக்கணித்தது ஏன்?
1 min read

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெறும் கொரனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, இன்று தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 3 திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கூறுகையில்,
” ஏற்கனவே திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் எதிர் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ வான எங்களை புறக்கனித்து தான் பல பணிகள் செய்து வருகிறார். தற்போது தமிழக முதல்வரும் அதே போல் செயல்படும் வகையில் தான் இன்று இந்த ஆய்வு கூட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறார். கொரோனாவிற்கு சாதி, மதம் இல்லை எனும் போது அதிமுக மட்டும் கட்சி சாயம் பூசுகிறது. அதிமுக அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ க்கள் மட்டும் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கபட்டு உள்ளனர். எதிர் கட்சியை சேர்ந்த நாங்கள் முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கபட்டு உள்ளது.” என குற்றம் சாட்டினார்.

இதே போல் திருவள்ளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் பேசுகையில், “திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டத்திற்கு அழைக்காமல் மாவட்ட ஆட்சியர் தகவல் மட்டுமே கொடுத்ததாகவும், அதற்கு நான் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு “இது அழைப்பா அல்லது தகவலா, என கேட்டதற்கு, அதற்க்கு தகுந்த பதில் இல்லாததால், இந்த ஆய்வுக் கூட்டத்தை வன்மையாக கண்டிப்பதாகவும்” ஆட்சியர் மீது புகார் தெரிவித்தார். அதிமுக சாயம் பூசி நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு இருவரும் கண்டனம் தெரிவித்தனர். தங்களது தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் அளித்துவிட்டு சென்றனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777