Mon. Sep 28th, 2020

பொன்னேரி பகுதியில், கரும்பலகையின் மூலம் 28ஆண்டுகளாக இளைஞர் மனங்களில் நல் விதைகளை விதைக்கும் தேநீர் கடைக்கார, சமூக ஆர்வலர்…

1 min read

பொன்னேரி அருகே உள்ள, மெதூர் கிராமத்தில் தேநீர் கடை நடத்தி வரும் ஒருவர், கரும்பலகை ஒன்றில் நாள்தோறும் திருக்குறள், அறிஞர்களின் பொன்பொழிகள், வாசகங்களை எழுதி இளைஞர்களை மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில், மெதூர் கிராமம் அமைந்துள்ளது. பொன்னேரி-பழவேற்காடு சாலையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் எம்.பி சேகர் (52), என்பவர் தேநீர் மற்றும் நாளிதழ்கள் விற்பனை செய்யும் கடையை, 30ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார்.

அதிகாலை 5மணி முதல் இரவு 9மணி வரை இந்த தேநீர் கடை செயல்படும். இங்கு தேநீர் கடை நடத்தி வரும் சேகர் கடையின் முன்பு கருப்பலகை ஒன்றினை அமைத்து அதில் நாள்தோறும் திருக்குறள், அறிஞர்களின் பொன்மொழிகள் ஆகியவற்றை எழுதி அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து தேநீர் கடை நடத்தி வரும் எம்.பி சேகர், கூறுகையில், 28ஆண்டுகளுக்கு முன்பு கடையி்ன் முன்புறம் கரும்பலைகை ஒன்றினை அமைத்து அதில் நாள் தோறும் திருக்குறளை விளக்க உரையுடன் எழுத தொடங்கினேன்.

1330 திருக்குறள் வாசகத்தை விளக்க உரையுடன் 3முறை எழுதி உள்ளேன். இதனை தொடர்ந்து அறிஞர்களின் பொன்மொழிகள் மற்றும் பாமர மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்களை எழுதி வருகிறேன். அத்துடன் இப்பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாம்கள், வேலை வாய்ப்பு முகாம்கள், தலைவர்களின் பிறந்த நாள் உள்ளிட்டவை குறித்தும் கரும்பலகையில் எழுதுவேன். மெதூர் கிராமத்தை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கரும்பலகையில் நான் நாள்தோறும் எழுதும் வாசகங்களை நின்று படித்து விட்டு செல்வர். அதே போன்று பழவேற்காடுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளும், கரும்பலகையில் எழுதியுள்ள வாசகங்களை படித்து விட்டு என்னை பாராட்டி விட்டு செல்வர். நாள்தோறும் ஒரு சேவையைபோல் காலை 6-30 மணிக்கு கரும்பலகையில் எழுத தொடங்கி 7மணிக்கு முடிப்பேன். கரும்பலகையில் எழுதும் எனது எழுத்துக்களை படித்து என்னை பொதுமக்கள் பாராட்டும் நிகழ்வு எனக்கு மனநிறைவை தருகிறது என தெரிவித்தார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *