September 23, 2021

திருவள்ளுர் மாவட்டத்தில், முடங்கி கிடக்கும் ஊராட்சிமன்ற நிர்வாகங்கள்…

1 min read
Spread the love

சென்ற ஆண்டு இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தபட்டது. அதில் ஊராட்சிமன்ற தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் அன்றையில் இருந்தே, ஊராட்சிமன்ற நிர்வாகத்தை நடத்த போதிய நிதி இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். இந்த நிலை திருவள்ளுர் மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் நிலவுகிறது. அதிலும், முதல்நிலை ஊராட்சி மற்றும் முன் அனுபவமும், பணபுழக்கமும் உள்ள ஒரு சில தலைவர்கள் தங்கள் சொந்த பணத்தை வைத்தும், குடும்பத்தினர் நகைகளை அடகு வைத்தும் சமாளிக்கின்றனர். ஆனால் பல தலைவர்கள் நிலை, தூய்மை காவலர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல், அவர்களை கண்டால் ஓடி ஒழியும் நிலை தான் உள்ளது.

இந் நிலையில் தான்,
கும்மிடிப்பூண்டியில் ஒன்றிய நிர்வாகம் ஏற்பாடு செய்த ஆலோசனை கூட்டத்தை, ஊராட்சி தலைவர்கள் புறக்கணித்து உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், கிராம வறுமை ஒழிப்பு திட்ட விளக்க கூட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஆணையர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரி முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குனர் சுதா சிறப்பு அழைப்பாளராக
பங்கேற்றார். இந்நிலையில், கூட்டம் 2 மணிக்கு என கூறி, அனைத்து ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் காத்திருக்க, அதிகாரிகள் 3 மணிக்கு மேல் வந்ததால், ஊராட்சி தலைவர் கூட்டமைப்பின் தலைவர் சுண்ணாம்புகுளம் ஊராட்சிமன்ற தலைவர் ரவி தலைமையில் நிர்வாகிகள் பூவலம்பேடு வழக்கறிஞர்
வெங்கடாசலபதி, கீழ்முதலம்பேடு நமச்சிவாயம், மாதர்பாக்கம் சீனிவாசன், பன்பாக்கம் கே.எஸ்.சீனிவாசன், பெருவாயல் ராஜசேகர் உள்ளிட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு, “காலதாமதமாக கூட்டம் நடத்துவது ஏன், கூட்டத்திற்கு மைக், ஒலிபெருக்கி வசதி ஏன் செய்யவில்லை “
என கேள்வி கேட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றபோது, அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும்,
” ஊராட்சிகளில் மக்கள் பணி செய்ய போதிய நிதி இல்லை, நிர்வாகம் செய்யவும்,
தூய்மை பணியாளர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட ஊராட்சிகளில் பணிபுரிபவர்களுக்கும் சம்பளபாக்கி என 6 மாத காலமாக நிதி ஒதுக்கப்படவில்லை, இதனால் அனைத்து ஊராட்சி மன்ற
தலைவர்களும், வீட்டு நகைகளை அடகு வைத்து ஊராட்சியை நடத்த வேண்டி உள்ளது” எனவும் அதுமட்டுமல்லாது, “கொரோனா தடுப்பு பணிகளிலும், கொரோனா பாதிப்பில் யாராவது இறந்தாலோ வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சில அதிகாரிகள் ஊராட்சி மன்றத்திற்கு ஒத்துழைப்பு தருவதில்லை ஊராட்சியில் யாராவது கொரோனா தொற்றுக்கு இறந்தால் அவர்களை புதைக்க கிருமி நாசினி கூட வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சார்பில் வழங்கப்படுவதில்லை. அதையும் ஊராட்சி தலைவர்கள் சொந்த பணத்தில் செய்ய வேண்டி உள்ளது ” என கூறி ஆதங்கப்பட்டனர்..

நிகழ்வின் போது பேசிய பூவலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் வெங்கடாசலபதி
கூறுகையில், ” மாநில நிதி குழு மான்யத்தில் ஊராட்சிகளுக்கு பராமரிப்பிற்காக மாதா மாதம் வழங்கும் நிதி 5 மாத காலமாக வழங்கப்படவில்லை, நிரந்தர பணிகளுக்கு மத்திய அரசின் 15வது நிதிக்குழு பரிந்துரைந்த திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்
செய்யப்போகும் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி 3 மாத காலம் ஆகியும் உரிய பதில் இல்லை என்றும், ஊராட்சிகளின் 3வது கணக்கு, 9வது கணக்கில் 2018ஆம் ஆண்டு முதல் இருப்பில் உள்ள பணத்தை கொண்டு ஊராட்சியில் நலப்பணிகளை செய்ய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், கொரோனா பாதிப்பு உள்ள ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் நிலவுகிறது ” எனவும் குற்றம் சாட்டினார்.

ஊராட்சி தலைவர்களின் பணிசுமையை புரிந்துக் கொள்ளாத வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடத்தும் இந்த கூட்டத்தில் பங்கேற்க தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்கள். அந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் எகுமதுரை ஸ்ரீபிரியா மகேந்திரன், பாதிரிவேடு என்.டி.மூர்த்தி,மாநெல்லூர் லாரன்ஸ், கண்ணன்கோட்டை கோவிந்தசாமி, சாணாபுத்தூர் அம்பிகாபிர்லா, குருவாட்டுச்சேரி கோமதி சேகர், புதுகும்மிடிப்பூண்டி டாக்டர் அஷ்வினி சுகுமாறன், ஆரம்பாக்கம் தனசேகர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்ற நிலையில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள்
கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் கிராம வறுமை ஒழிப்பு திட்ட விளக்க கூட்டம்
நடக்கவில்லை.

மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சிமன்ற கூட்டமைப்பின் தலைவர் மேலூர், நிலவழகன் அவர்கள் கூறுகையில், கடந்த 5 மாதங்களாக எந்த ஊராட்சிக்கும், அரசு சரியாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் குடிநீர் ஆபரேட்டர்கள், மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கூட ஊதியம் வழங்கபடாமல் உள்ளது, மேலும் பல ஊராட்சிமன்ற தலைவர்கள் தங்கள் மனைவிகளின் நகைகளை அடகு வைத்து ஊழியர்களுக்கு சில மாதங்களாக ஊதியம் கொடுத்தோம், இனி அதற்க்கு கூட வாய்ப்பு இல்லை, வேறு நிதியில் இருந்து ஊதியம் வழங்க அனுமதி கேட்டோம் அதற்க்கும் அதிகாரிகள் சரியான பதில் கூறாமல் இருக்கிறார்கள் ” என கூறி வேதனைபட்டார்.

சோழவரம் நல்லூர் ஊராட்சிமன்ற தலைவரும், தேமுதிக கட்சியின், கிழக்கு மாவட்ட செயலாளர் டில்லியின் மனைவியுமான அமித்தவல்லி டில்லி அவர்கள், கூறுகையில், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள எந்த ஊராட்சியிலும், நாங்கள் பதவியேற்றதில் இருந்து நிம்மதியாக மக்கள் பணி செய்ய முடியவில்லை, வளர்ச்சி பணிகள் நன்றாக செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த நாங்கள் இப்போது பணியாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்கமுடியாத நிலையில் இருக்கிறோம், இந்த பிரட்சனை சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட, சோழவரம் ஒன்றிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருக்கிறோம், என கூறினார்.

பூண்டி ஒன்றிய, ஊராட்சிமன்ற தலைவர்களின் கூட்டமைப்பு செயலாளர், குமார் அவர்கள் கூறுகையில், எங்கள் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளிலும் அதே நிலை தான் நீடிக்கிறது ஒரு சில தலைவர்கள் சூழ்நிலையை சமாளிக்கிறார்கள். பலர் போராட வேண்டும் என்ற எண்ணத்திற்க்கு வந்து விட்டார்கள். எங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கேட்டு கொண்டதற்க்கு இணங்க, அதிகாரிகள் ” துப்புரவு பணியாளர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள் ஊதியத்திற்க்கு மட்டும் மற்ற நிதியில் இருந்து நிதியை மாற்றம் செய்து கொடுக்கிறோம் ” என கூறி இருக்கிறார்கள் என்றார்.

திருவள்ளுர் ஈக்காடு ஒன்றியத்தின் ஊராட்சிமன்ற கூட்டமைப்பின் தலைவர், உஷா பிரேம்சேகர் கூறுகையில், எங்கள் ஒன்றியத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் மிகவும் கொதிப்படைந்து போய் உள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில விவரங்கள் கேட்கபட வேண்டும், என நிர்வாகிகள் முடிவெடுத்து உள்ளனர். எங்கள் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சியில் 18 ஊராட்சிகளுக்கு அதிகாரிகள் ஊதியம் கொடுக்கும் அளவிற்க்கு ஏற்பாடு செய்து உள்ளனர். ஆனாலும் அடிப்படை பணிகள் வளர்ச்சி பணிகளுக்கான நிதி பூஜ்ஜியம் நிலையில் தான் உள்ளது, என்றார்.

செய்தியாளர்கள் – சுடர்மதி, அபுபக்கர்,மகேஷ், சீனிவாசன்

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed