முகத்துவார பிரட்சனை, எண்ணூரை சேர்ந்த 7 மீனவ கிராம மக்கள் எண்ணூர் துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
1 min read
சென்னை, எண்ணூர் மீனவ பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக பார்க்கப்படும் முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுக்களாலும், நீர் வழி தடம் மாறியும் போய் உள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதனை கண்டித்து எண்ணூர் குப்பம், முகத்துவார குப்பம், நெட்டுகுப்பம், சிவன் படை வீதி, சின்ன குப்பம், பெரியகுப்பம் தாழங்குப்பம் ஆகிய 7 மீனவ கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்ட படகுகளில் கறுப்புக் கொடி கட்டிக் கொண்டு முகத்துவாரம் பகுதியில் இருந்து ஒரு மணி நேரம் கடலில் பயணித்து அங்குள்ள எண்ணூர் துறைமுக முகப்பு வாயிலில் படகுகளில் இருந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களின் முக்கிய கோரிக்கை என்பது 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட எண்ணூர் துறைமுகத்தால், முகத்துவாரம் மணல் திட்டுகளாக மாறிப் போனதாகவும், அதனால் நீர்வழி தடம்மாறி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இந்நிலையில் மீன் பிடிக்க முடியவில்லை என்றும் உடனடியாக முகத்துவாரத்தில் தூர்வாரி முகத்துவாரத்தின் இருபுறங்களிலும் கற்களை கொட்டி தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து இவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக மீனவ பெண்கள் எண்ணூர் முதல் தாழங்குப்பம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கைகளில் கருப்பு கொடியுடன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களுக்கு ஆதரவாக எண்ணூர் சுற்று வட்டார வணிகர்கள் கடைகளை மூடி அவர்களும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777