ஆந்திர எல்லை ஒருங்கிணைந்த சோதனை சாவடியில், போலிசாரின் தொடர் கஞ்சா வேட்டை…
1 min read
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் புதன்கிழமை நடத்திய வாகன சோதனையில் 1 கிலோ கஞ்சா 20 அட்டைகளில் இருந்த 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஏழுகிணறு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் 1 கிலோ கஞ்சா, 20அட்டைகளில் 200 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை கைது செய்த போலீஸார், ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (20),சென்னை சென்ட் தாமஸ் மவுண்ட் பகுதியை ஸ்ரீநாத்(21) என தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவையும், 200 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 1 மாதத்தில் 15 வழக்குகள்- எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் மேற்பார்வையில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல்
தனிப்படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் இரு சக்கர வாகனங்கள், கார்களை போலீஸார் சோதனையிட்டனர். கடந்த 1 மாத காலமாக நடைபெற்ற இந்த சோதனையில், 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 29 பேர் கைது செய்யப்பட்டு 12 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதே சமயம் இந்த சோதனைகளில் 22 கிலோ கஞ்சா மற்றும் செம்மரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு 11 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களையும், இளைஞர்களையும் பாதுகாக்கும் நோக்கில் தமிழக எல்லையில் உள்ள எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் தினமும் போலிசாரின் தீவிர சோதனை தொடர்ந்து நடைபெறும், என்று கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் தெரிவித்தார்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777