கும்முடிபூண்டி ஒன்றியத்தில், அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, 61 ஊராட்சிகளில் பனவிதை நடும் நிகழ்வு துவக்கம்…
1 min read
கும்மிடிப்பூண்டியை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும் காந்தி உலக மையம் மற்றும் செங்குன்றம் மற்றும் சிறுபுழல்பேட்டையில் இயங்கும் எலைட் கல்வி குழுமம் இணைந்து மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் அடங்கிய 61 ஊராட்சிகளில் பனவிதை நடும் நிகழ்வை இன்று மேலக்கழனி ஊராட்சியில் துவக்கினர்.

மேலக்கழனி ஊராட்சி ராக்கம்பாளையத்தில் உள்ள பெரிய ஏரியில் நடைபெற்ற பனவிதை நடும் நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர் பத்மஜா கௌரிசங்கர் தலைமை தாங்கினார். எலைட் கல்வி குழும தாளாளர் பால் செபஸ்டின், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணை தலைவர் மாலதி குணசேகரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மேலக்கழனி ஏரியில் பனம் விதைகளை நட்டு இந்த பணியை துவக்கி வைத்து காந்தி உலக மையத்தின் சேவைகளை பாராட்டி வாழ்த்தினர். தொடர்ந்து மேலக்கழனி ஊராட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஏரிக்கரையில் பனவிதைகளை நட்டனர். நிகழ்வில் மேற்கண்ட ஏரியில் 1000க்கும் மேற்பட்ட பனவிதைகள் நடப்பட்டது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை காந்தி உலக மைய நிறுவன தலைவர் எம்.எல்.ராஜேஷ் முன்னின்று சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்வில் காந்தி உலக மைய நிர்வாகிகள் விஜயலட்சுமி, மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலக்கழனியை தொடர்ந்து தினமும் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள ஏரி, குளங்களில் பனவிதைகள் நடப்படும் என்றும், இவைகள் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தின் துணையோடு வளர்க்கப்படும் என்று நிகழ்வின் போது காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் தெரிவித்தார். நிகழ்வில் காந்தி உலக மையம் மற்றும் எலைட் கல்வி குழுமம் இணைந்து பனை பொருட்களால் செய்யப்படும் கைவினை பொருட்கள் அடங்கிய கண்காட்சியை பார்வைக்கு வைத்தனர். நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் ஆரோன், சிவா, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777