November 27, 2020

திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில், அங்கீகாரம் இல்லாத பிராய்லர் கோழி கடைகளை அகற்ற, தீர்மானம்…

1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும், என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், எல்லாபுரம் ஒன்றியம்,கோடுவெளி ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற தலைப்பில் இம்மாவட்டத்தில் உள்ள இந்த ஊராட்சியில் முதல் முதலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் சித்ராகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரத்குமார், ஒன்றியகுழு உறுப்பினர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பலதா, குருவாயல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அருள், வெங்கல் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டில்லி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது,
ஒரு வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் குழந்தைகள் என்றும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த 5 வகையான சட்டங்களையும் விளக்கிக் கூறினார். மேலும், சட்டத்துக்கு முரண்பட்ட குழந்தைகள் யார்? யார்? என்றும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் யார்? யார்? என்பதையும் விளக்கிக் கூறினார். மேலும், தற்போது அனைத்து காவல் நிலையங்களிலும் சி.டபுள்யூ.பி.ஓ என ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல் நிலையத்தில் செயல்படும் பிரிவு ஆகும்.

மேலும், குழந்தைகளுக்கான தொலைபேசி உதவி எண் 1098 உபயோகப்படுத்திக் கொள்ளலாம். குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கிராம அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் என 3 கட்டமாக செயல்படுத்தப்படும். என்று கூறினார். கிராமத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதனை தீர்மானமாக கூட்டத்தில் போட்டு தீர்வு காணமுடியும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், குழந்தைகள் விரைவில் பருவம் அடைவதை தடுக்கும் வகையில் இந்த ஒன்றியத்தில் அனுமதி இன்றி செயல்படும் பிராய்லர் கோழி கடைகளை அகற்ற வேண்டுமென்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் சுகாதாரத் துறை, கல்வித் துறை, தொழிலாளர் நலன், வீட்டுவசதி, நீதித்துறை, காவல்துறை, கிராம நிர்வாக அலுவலகம், கிராம ஊராட்சி, தொண்டு நிறுவனங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் திவாகர் நன்றி கூறினார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *