November 25, 2020

கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம், கும்முடிப்பூண்டி என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம்…

1 min read

கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், ஒன்றிய ஆணையர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் கெளரி , ஒன்றிய பொறியாளர் நரசிம்மன், மாவட்ட கவுன்சிலர்கள் சாரதா முத்துசாமி, ராமஜெயம் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மாணிக்கம் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி சிற்றரசர்கள் முடி சூடும் இடமாக இருந்ததால் அதன் பழைய பெயரான கோன்முடிப்பூண்டி என்பதை குறிக்கும் விதமாக கும்முடிப்பூண்டி என்ற பெயர் மாற்றம் செய்ய கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதன் மூலம் அனைத்து துறை சார்பிலும் இனி கும்முடிப்பூண்டி என்று அழைத்திட தமிழக அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளை சேர்ந்த 81 வருவாய் கிராமங்களில் 70சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நிலையில், இந்த பகுதிகளை சேர்ந்த பெண்கள் பொன்னேரி, சென்னை போன்ற பகுதிகளுக்கு சென்று கல்லூரி படிப்பை தொடர வேண்டிய சூழலில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் வெறும் 20சதவீதம் பேர் மட்டுமே கல்லூரிக்கு செல்லும் சூழலில் ஏழை மாணவிகளின் கல்வி
வசதிக்காக கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் உள்ள அரசு நிலத்திலோ,
புதுவாயலில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான 75ஏக்கர் அரசு நிலத்திலோ அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அல்லது அரசு மகளிர் கல்லூரி அமைத்திட தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அரசு பொதுமருத்துமனையை தரம் உயர்த்தவும், பெத்திக்குப்பம் பகுதியில் அரசு பேருந்து பணிமனைக்கு அரசு உத்தரவு இட்டும் பணி நடக்காத சூழலில் மேற்கண்ட இடத்தில் பணிமனை துவங்கவும், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட், தேர்வாய் சிப்காட், மகேந்திரா சிட்டி செயல்பட்டு வரும் நிலையில் தற்போது மாநெல்லூர்-சாணாபுத்தூர் பகுதியில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டை உருவாக உள்ளதால் கும்மிடிப்பூண்டியில் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தொழிற்கல்வி கூடம் அமைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் கும்மிடிப்பூண்டியில் 61 ஊராட்சியில் செயல்படும் சிப்காட்டுகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியினை கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் அனைத்து ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தவும், வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் எனவும் தீர்மானம் இயற்றப்பட்டது.

கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கெளரி அரிதாஸ் பேசுகையில், அண்ணாமலைச்சேரியில் இருந்து ரெட்டம்பேடு வரை நகர பேருந்து இயங்கி வரும் நிலையில், ரெட்டம்பேடு அருகே 2 கி.மீ தொலைவில் உள்ள குருவியகர மக்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்து வசதி இன்றி அவதிப்படுகின்றனர். இதனால் மேற்கண்ட பேருந்தை குருவியகரம் முதல் அண்ணாமலைச்சேரி வரை இயக்க வேண்டும் என்றும், ஆத்துப்பாக்கம், ரெட்டம்பேடு, வழுதலம்பேடு ஆகிய 3ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

சுயேச்சை கவுன்சிலர் உஷாரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரவிக்குமார், திமுக கவுன்சிலர் சிவா, தேர்வழி திமுக கவுன்சிலர் அமலா சரவணன் பேசும் போது சுண்ணாம்புகுளத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்துகள் நடப்பதாகவும், கெட்ணமல்லி, ஜி.ஆர்.கண்டிகையில் சிறு தூறலுக்கு கூட தொடர் மின் தடை ஏற்படுவதாகவும், பூதூர், என்.எம்.கண்டிகையில் சுமார் 80 மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும் , தேர்வழியில் குறைந்த மின் அழுத்தம் அதிகமாக நிலவுவதாகவும், திடீரென உயர் மின் அழுத்தம் நிலவுவதால் வீடுகளில் மின் சாதன பொருட்கள் சேதமடைவதாகவும் இவைகள் சரி செய்ய வேண்டும் எனவும் கூறினர். திமுக கவுன்சிலர் ஜெயச்சந்திரன் பேசும் போது பாத்தபாளையம் பகுதியில் மோசமான நிலையில் உள்ள தரைபாலத்தை காங்கிரீட் பாலமாக மாற்ற வேண்டும் என்றும், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுரங்கபாதையில் எப்போதும் மழை நீர் தேங்குவதால் அங்கு மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சுயேச்சை கவுன்சிலர் கலா உமாபதி பேசுகையில் கண்ணன்கோட்டை, கரடிப்புத்தூர், தேர்வாய் பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார். சுயேச்சை கவுன்சிலர் மெய்யழகன் பேசும் போது நெடுஞ்சாலைகளை இணைக்கும் சாலைகளில் விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்றார். பாமக கவுன்சிலர் சங்கர் பேசும் போது ஊராட்சி தலைவர்களுக்கு அலுவலகம் உள்ளது போல ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் அலுவலகம் தேவை என்றார். காங்கிரஸ் கவுன்சிலர் மதன்மோகன் பேசும் போது புதுகும்மிடிப்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊராட்சி ஒன்றியத்தின் அனுமதி இல்லாமல் செயல்படும் தொழிற்சாலைகளை கணக்கில் எடுத்து அவைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதிமுக கவுன்சிலர் நாகராஜ் பேசுகையில், முக்கரம்பாக்கத்திற்கு நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை தொடர வேண்டும் என்றும், தண்டலம் முதல் முக்கரம்பாக்கம் மேம்பால வசதி, காரணி சாலையை மேம்படுத்துவது குறித்து கோரிக்கை வைத்தார்.

கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, ஜோதி, சிட்டிபாபு,ஜெயந்தி கெஜா, அதிமுக கவுன்சிலர்கள் ரவக்கிளி ஜெயராமன், ரோஜா ரமேஷ்குமார், ஆரோக்கியமேரி, தேவி சங்கர், ஏ.சீனிவாசன், வி.சீனிவாசன், ரேவதி, பாமக கவுன்சிலர் மணிமேகலை கேசவன் உள்ளிட்ட பலர் பேசினார்கள் . கூட்ட முடிவில் பேசிய ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

செய்தியாளர் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *