November 25, 2020

எண்ணுர் துறைமுகத்தை, வெளி மாநிலங்களுடன் இணைக்கும், தச்சூர் – சித்தூர் 6 வழி சாலை திட்டத்திற்க்கு விவசாயிகள் எதிர்ப்பு…

1 min read

தமிழகத்திற்கு வடக்கேயுள்ள மாநிலங்களில் இருந்து, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாகவும், நெரிசலின்றியும் வருவதற்காக பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்திலிருந்து, தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் வரை 126 கி.மீட்டர் தூரத்திற்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த சாலை ஆந்திராவில் 82 கிலோமீட்டரும், தமிழ்நாட்டில் 44 கிலோமீட்டர் தூரமும் அமைக்கபட உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் தொடங்கும் இந்த சாலை ரங்கராஜபுரம், நகரி, விஜயாபுரம் வழியாக தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வழியாக தச்சூரில், சுற்றுவட்டச் சாலை அமைக்க திட்டமிட்டு உள்ள இடத்தில் இணைகிறது. என்.எச்.716 என்று அழைக்கப்படும், இந்த சாலை அமைப்பதற்காக ரூ.3,197 கோடி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது. இந்த சாலை அமைக்க மொத்தமாக 2,186 ஏக்கர் நிலம் கையகப்படுத்தபட உள்ளதில் தமிழகத்தில் 889 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மீதம் ஆந்திரமாநிலத்தில் உள்ள நிலங்கள் கையகபடுத்தபட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாலையில் 10 பெரிய பாலங்கள், 33 சிறிய பாலங்கள் கட்டபட உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் 100 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.

காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு சரக்கு வாகனங்கள் நகர்புறங்களில் செல்வதை தவிர்க்கவும், சென்னை மற்றும் பெங்களூர் விரைவு வழித்தடத்தை இணைக்கும் வகையிலும் அமைக்கப்பட உள்ளது. பொருளாதார மண்டலத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவே இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த 6 வழிச்சாலை அமைவதன் மூலம் சென்னை மாநகரத்திற்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தும் மத்திய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் தரப்பில், இந்த சாலையை பற்றி கூறிப்பிடும் அம்சங்களாகும்.

இந்நிலையில், இந்த சாலையின் பணியை துவக்க மக்களின் கருத்து கேட்பு கூட்டம் ஊத்துகோட்டை அலுவலகத்தில் நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை துறையின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் குணசேகரன் அவர்கள் தலைமையிலும், வட்டாச்சியர் பிரித்தி அவர்கள் முன்னிலையிலும் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட பெரும்பாலான விவசாயிகள் இந்த சாலை திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் அதிகாரிகளுடன் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து, வட்டாச்சியர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது, விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ” எங்களின் வாழ்வாதாரம் விவசாயம் தான், அதை அழிக்க நினைக்கும் இந்த திட்டத்தை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், பலமாக எதிர்த்தும் வருகிறோம். எங்களுடைய எதிர்ப்பை இதற்க்கு முன் பலமுறை வெளிபடுத்தி, அதிகாரிகளிடம் மனுக்களையும் வழங்கி இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு நல்ல முடிவு தான் கிடைக்கவில்லை” என ஆதங்கத்துடன் கூறினார்கள்.

இது குறித்து, வட்டாசியர் பிரித்தி அவர்களிடம் பேசிய போது, அவர் கூறியதாவது, இந்த திட்டம் மத்திய அரசின் தொலைநோக்கு திட்டம் ஆகும். இத்திட்டத்தால் எதிர்காலத்தில் நல்ல பலன் உள்ளது. எண்ணுர் துறைமுகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல கூடிய வாகனங்கள் சென்னையின் உள் செல்லாமல், வெளிவட்ட சாலையின் வழியே வந்து, செல்ல இந்த சாலை ஏதுவாக இருக்கும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இந்த தச்சூர் – சித்தூர் சாலை திட்டத்தை வடிவமைத்துள்ளது. இந்த திட்டத்தை குறித்து, மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், ஊத்துகோட்டை வட்டாசியர் அலுவலகத்தில், கொரோனா காலத்தின் பிரட்சனைகளை கருத்தில் கொண்டு ஒரே நாளில் நடத்தாமல், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடத்தப்படுகிறது. நேற்று துவங்கபட்ட இந்த கூட்டம் இன்றும், நாளையும் நடக்கும். நேற்றும் பல கிராம மக்கள் வந்து மனு கொடுத்து சென்றனர். இன்றும், தொடர்ந்து மக்களின் கருத்துக்களை கேட்டும், மனுக்களை பெற்று கொண்டு தான் இருக்கிறோம்.” என்றார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *