பெரியபாளையம் அருகே, மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கண்டலம் ஊராட்சியில் அடங்கிய மடவிளாகம், மடவிளாகம் ஆதிதிராவிடர் குடியிருப்பு, அண்ணா நகர் இருளர் குடியிருப்பு, ஆகிய 3 கிராமங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதும், அதனால் மக்கள் இருளில் பரிதவிப்பதும் வாடிக்கையாக இருந்து வந்தநிலையில், 3கிரமங்களுக்கும் தனித்தனியாக டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க கோரி, மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால், மின்வாரியத்தை கண்டித்து கன்னிகைப்பேர் மின்வாரிய அலுவலகத்தை ஒன்றியக்குழு உறுப்பினர் ரவி தலைமையில் மின் தடையால் பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். “மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டினர். பல நாட்கள் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதன் காரணமாக கிராமங்கள் இருளில் தத்தளிப்பதாக கூறி தங்கள் வேதனையை தெரிவித்தனர்.”

மேலும், “குடிநீர் வழங்குவதற்கு கூட மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிபடுவதாக கூறி புலம்பினர். தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ளதால், கொசுக்களால் டெங்கு உள்ளிட்ட நோய் அச்சுறுத்தல் இருப்பதால் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், தங்களது கிராமத்திற்கு புதிதாக டிரான்ஸ்பார்மர் பொருத்தி சீரான மின்சாரம் வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட, அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடுவோம்” என எச்சரித்தனர். முன்னதாக, பெரியபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் போராட்டத்தில் ஈடுபட வந்த மக்களை, தனிமனித இடைவெளி பின்பற்றுமாறு அறிவுரை கூறியதுடன், முகக்கவசங்கள் அணியாமல் வந்தவர்களுக்கு சொந்த செலவில் முகக்கவசங்கள் வழங்கிய, சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர், ஒன்றியக் குழு உறுப்பினர் ரவி, மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் மதன் என்கிற சத்யராஜ் ஆகியோர், மின்வாரிய கோட்ட பொறியாளர் பாலச்சந்திரன் கிராம நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களிடம், ” இன்னும் 3 மாதம் காலத்திற்குள் மூன்று கிராமத்திற்க்கும் தனித்தனியாக மின் டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து தரப்படும்.” என்று, உறுதிபட உறுதிமொழி கடிதத்தை எழுதி கொடுத்த பின்னரே, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பதற்றமும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது .

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777