November 25, 2020

பழவேற்காட்டில் பச்சிளம் குழந்தை உயிர் இழந்ததால், பொது மக்கள், அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம்…

1 min read

திருவள்ளுர் மாவட்டம் பழவேற்காடு அரங்கம் குப்பத்தை சேர்ந்தவர் குமார், இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில் குழந்தைக்கு திடீரென மூச்சு தினறல் ஏற்பட்டுள்ளது. அதனால் குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறியதை பார்த்த குமாரும், லட்சுமியும் பதறி அடித்து கொண்டு குழந்தையை பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் யாரும் இல்லாததால், மேலும் பதட்டத்தில் குழந்தையின் பெற்றோர்கள் குழந்தை படும் அவதியை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர் யாரும் இல்லாததால், அங்கு பணியில் இருந்த செவிலியர் குழந்தையை பரிசோதித்துவிட்டு குழந்தை மூச்சுவிட மிகவும் சிரமபடுவதாகவும், உடனே சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். உடனே குழந்தையை சென்னைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸை அழைத்தனர். ஆனால் ஆம்புலன்சும் தற்சமயம் வெளியில் சென்றுவிட்டதால், தனியார் வாகனத்தில் அழைத்து செல்லுங்கள் என மருத்துவமனை ஊழியர்கள் கூறியதால், மேலும் பதறிபோன குமார் தனியார் வாகனத்திற்க்கு வாடகை கொடுக்க கூட வசதி இல்லாததால், செய்வதறியாது பரிதவித்து கொண்டு ஆம்புலன்ஸ் வந்துவிடும் என கூறியதால் காத்துகிடந்தார். ஆனால், சிறிது நேரத்தில் பரிதாபமாக குழந்தை, தினறி கொண்டு இருந்த மூச்சையும் நிறுத்தி கொண்டது. இதை கண்ட குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் நேற்று இரவே பழவேற்காடு பகுதியில், சோகத்துடன் பதற்றமும் தொற்றி கொண்டது.

இந் நிலையில், இன்று காலை பழவேற்காடு மீனவ கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பழவேற்காடு அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பொன்னேரி ஆர்.டி.ஓ செல்வம், திருவள்ளுர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர், மீஞ்சூர் ஒன்றிய குழு பெரும்தலைவர் ரவி ஆகியோர் பழவேற்காடு நேரடியாக சென்று, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மீனவ கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையான 5 கோரிக்கைகள் முன் வைத்தனர். அதை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தும், அதை மக்கள் ஏற்று கொள்ளாததால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், திருவள்ளுர் மாவட்ட சுகாதர இணை இயக்குனர் கைபட கடிதம் எழுதி கொடுத்ததை தொடர்ந்து, மீனவ கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அந்த கடிதத்தில், அதிகாரிகள் நிறைவேற்றி தருவதாக குறிப்பிட்டு இருந்த, மீனவ கிராம மக்களின் கோரிக்கை என்னவென்றால்,

1.பழவேற்காடு அரசு மருத்துமனையில், 24 மணி நேரமும் சுழற்ச்சி முறையில் மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள்.

2 . இந்த அரசு மருத்துவமனையில் எப்போதும் ஒரு அவசர வாகனம் நிறுத்தி வைக்கபடும்.

  1. இந்த மருத்துவமனைக்கு பிண கூறு ஆய்வு கூடம் அமைத்து தரப்படும்.
  2. வாரம் தோறும் தொடர்ந்து, கர்பிணி பெண்களை பரிசோதித்து, பிரசவம் பார்க்க ஒரு பெண் மருத்துவர் நியமிக்கபடுவார்.
  3. கர்பணி பெண்களுக்கு ஸ்கேன் வசதியும், பிறந்த குழந்தைகள் வைத்து பாதுகாக்க இன்க்குபேட்டர் கருவி வைக்கபடும். போன்ற, மக்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருவதாக, அதிகாரிகள் அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா, மில்டன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *