November 25, 2020

கும்மிடிப்பூண்டி அருகே, கண்ணன் கோட்டை நீர்தேக்கத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

1 min read

கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணன் கோட்டை – தேர்வாய் நீர்தேக்கத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஞாயிறன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் 1250 ஏக்கர் பரப்பில் கண்ணன்கோட்டை ஈசா ராஜன் ஏரி, தேர்வாய் ஏரியை இணைத்து சென்னைக்கு 1 டி.எம்.சி தண்ணீரை கொண்டு செல்ல நீர் தேக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு அது தற்போது முடிவடையும் தருணத்தில் உள்ளது.

இந்த நீர் தேக்க திட்டத்திற்காக கண்ணன்கோட்டையில் மட்டும் சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
380 கோடி மதிப்பிலான இந்த நீர் தேக்க திட்டத்தால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் நீர் தேக்கங்களோடு கூடுதலாக கண்ணன்கோட்டை நீர் தேக்கமும் சென்னைக்கு 1 டி.எம்.சி தண்ணீரை தரும் நீர் ஆதாரமாக சேரும் வகையில் இந்த திட்டம் 2010ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்த நீர் தேக்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறக்க உள்ள நிலையில் நீர்தேக்க திட்ட இறுதி பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, பொன்னேரி ஆர்.டி.ஓ செல்வம் கண்ணன்கோட்டை நீர் தேக்க திட்ட செயற் பொறியாளர் ந.தில்லைக்கரசி, உதவி பொறியாளர் பா.தனசேகர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கதிர்வேல், கண்ணன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து கண்ணன்கோட்டை நீர்தேக்கத்தை சுற்றி பார்வையிட்ட ஆட்சியர் பா.பொன்னையைா பருவமழைக்குள் மீதமுள்ள பணிகளை முடித்து விட்டால், இந்த 2021 ஆண்டு முதல் கண்ணன்கோட்டை நீர்தேக்கத்தில் இருந்து சென்னைக்கு 1 டி.எம்.சி தண்ணீரை வழங்க ஏதுவாக இருக்கும் என்றார். விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து தற்போது கண்ணன்கோட்டை நீர்தேக்கம் திறப்பு விழாவிற்கு தயாராகி வரும் நிலையில்,
” நீர்தேக்க திட்டத்திற்காக நிலங்களை இழந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, இழப்பீடு தொகை உள்ளிட்ட பிரட்சனைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணன்கோட்டை ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *