வேல் யாத்திரையில், இன்னாள் போலிசாரை காப்பாற்றிய, முன்னாள் போலிஸ் அதிகாரி…
1 min read
தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வேல்யாத்திரை செல்கிறேன் , என்ற பெயரில் தமிழகத்தை சட்டம் ஒழுங்கு கெடும் அளவிற்க்கு ஒரு பரபரப்பான சூழலை உருவாக்கிவிட்டார். இந்த வேல்யாத்திரையின் நோக்கம் என்ன, இதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன், என எந்த காரணத்தையும் தமிழக பாஜகவால் உலகிற்க்கும், கோர்ட்டிற்க்கும் சொல்ல முடியாத நிலையில், தமிழகத்தில் ஒரு அரசியல் லாபத்திற்காக, நவம்பர் 6-ந் தேதி முதல் துவங்கி டிசம்பர் 6-ந் தேதி வரை அறுபடை வீடுகளுக்கும் செல்ல கூடிய வேல் யாத்திரையை நடத்துவோம், என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்தார்.

அந்த தமிழக பாஜகவின் வேல் யாத்திரைக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போதுதான், வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தடையை மீறி வேல்யாத்திரையை நடத்துவோம் என தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார். இதற்காக திட்டமிட்டபடி சென்னையில் இருந்து திறந்தவேனில் திருத்தணி நோக்கி வேல் யாத்திரையை துவக்கினார் எல்.முருகன்.

பூந்தமல்லி அருகே, நசரேத்பேட்டையில் போலிசார் முருகனை மடக்கிய போது, போலிசாரிடம் முருகன், திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்வது எனது அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது என்றார். அதனால் போலீசார் முருகன் திருத்தணி செல்ல அனுமதித்தனர். அவருடன் 5 வாகனங்கள் மட்டும் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், முருகன் செய்தியாளர்களிடம் என் வேல்யாத்திரை துவங்கிவிட்டது. என கூறிவிட்டு தன் பயணத்தை தொடர்ந்தார்.

அதனால், குழம்பி போன போலீசார் தரப்பில், திருத்தணி கோவிலுக்கு செல்வதாக முருகன் விளக்கம் அளித்தார் அதனால் அவருடன் 5 வாகனங்களில் 20 பேர் மட்டும் செல்ல அனுமதித்திருந்தோம் என்றனர். திருத்தணியை சென்றடைந்த முருகனுக்கு, அங்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கையில் வேலை ஏந்தியபடியே திருத்தணி முருகன் கோவிலில் முருகரை சாமிதரிசனம் செய்தார். அதுவரை போலிசாரும் பொறுமையுடன் முருகனுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். ஆனால், முருகன் தனது வேல்யாத்திரையை தொடர முயன்றதால்,
உடனே போலீசார் முருகனிடம், வேல் யாத்திரைக்கு அரசும், கோர்ட்டும் அனுமதி தரவில்லை, ஆகவே நீங்கள் பயணத்தை தொடர கூடாது, என கூறியும் கேட்காததால், போலிசார் முருகன் உள்ளிட்ட அவருடன் வந்திருந்த அனைத்து பாஜகவினரையும் கைது செய்தனர்.

அவர்கள் அனைவரையும் திருத்தணியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது அங்கு மின்சாரம் இன்றி இருந்ததால் ஆத்திரமடைந்த பாஜகவினர், தமிழக அரசை கண்டித்தும், போலிசாரை கண்டித்தும் கோஷம் எழுப்பியபடி சென்று சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து, அங்கு வந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்களை மறியலை கைவிடுமாறு கேட்டு கொண்டதுடன், சமாதனம் செய்ய முயன்றார். ஆனால் பாஜகவினர் அவருடைய வேண்டுகோளை ஏற்காமல் சாலை மறியலை தொடர்ந்தனர். அதனால் மறியல் செய்தவர்களை போலிசார் அப்புறபடுத்த முயன்றனர்.

அப்போது போலிசாருக்கும், பாஜகவினருக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது, காஞ்சிபுரம் பாஜகவின் மாவட்ட துணைதலைவர் ஓம் சக்தி செல்வமணி என்பவர், திருவள்ளுர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்களின் சட்டையை பிடித்து தள்ளினார். அதனால் அதிர்ச்சி அடைந்த போலிசார் செய்வதறியாது இருந்த நிலையில், பாஜகாவில் தற்போது இணைந்த முன்னாள் போலிஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவினரை இடைமறித்து அவர் கட்சியினரை சமாதானம் செய்தார். பின்னர் அங்கு அமைதி திரும்பியது. இதையடுத்து பாஜகவினர் மீண்டும் கல்யாண மண்டபத்திற்குள் சென்றார்கள். பின்னர் சிறிது நேரத்தில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்களின், சட்டையை பிடித்து தள்ளியதற்காக, இன்று அதிகாலை காஞ்சிபுரம் மாவட்ட பாஜக துணை தலைவர் ஒம் சக்தி செல்வமணியை, திருத்தணி போலீசார் தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். செல்வமணியை அழைத்துச் சென்ற போலீசார், அவர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் மீது கூட்டத்தில் சட்டையை பிடித்தது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. பின்னர் உள்நோக்கத்துடன் நான் செய்யவில்லை, என காஞ்சிபுரம் மாவட்ட துணை தலைவர் செல்வமணி கூறியதால், அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நடந்தவைகளை எல்லாம் பார்க்கும் போது, தமிழக பாஜக வினர் என்ன நினைப்பில் இப்படியெல்லாம் ஆட்டம் போடுகின்றனர். என்று சாதாரண பாமர மக்கள் கூட நினைத்து வேதனைபடுகின்றனர். இவர்கள் தமிழக அரசின் தடையை மீறி இருக்கிறார்கள், கோர்ட்டின் உத்தரவை மீறுகிறார்கள், பூந்தமல்லியில் தடுத்த போலிசார் முருகன் முருகரை தரிசிக்க செல்கிறார் என்கிறார்கள், பின்னர் முருகன் செய்தியாளர்களிடம் என் வேல் யாத்திரை துவங்கிவிட்டது என கூறுகிறார், கோயிலுக்கு சென்று என் வேல்யாத்திரை தொடரும் என்கிறார், அதனால் கைது செய்யப்படுகிறார், முருகனுடன் கைதான கர்நாடகா அமைச்சர் சிறிது நேரத்தில் மண்டபத்தில் இருந்து வெளியேறி சென்றுவிடுகிறார், தங்களுக்கு வசதி குறைவாக உள்ளது என்று சாலைமறியல் செய்கிறார்கள், மறியல் செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுக்கும் நேர்மையானவர் என மக்களால் பாராட்டபடும் ஒரு அதிகாரி அசிங்கப்படுத்தபடுகிறார், அந்த நபர் கைது செய்த சில மணி நேரத்தில் விடுவிக்கப்படுகிறார், இவை எல்லாம் எந்த தைரியத்தில் இங்கு அரங்கேறுகிறது. என்பது தான் மக்களின் கேள்வியாக உள்ளது.

அலைகடலாய் திரண்ட ஜல்லிகட்டு போராட்டத்திலோ, அல்லது எத்தனையோ கட்சிகளின் லட்சகணக்கில் கூடும் மாநாட்டு கூட்டத்தை கூட எளிமையாக வழிநடத்தும் தமிழக போலிஸ் அதிகாரிகளுக்கு இது போன்ற சம்பவம் நடந்தது கிடையாது. தவறு செய்த நபர், நான், இதை உள்நோக்கத்துடன் செய்யவில்லை, என கூறியதால் போலிசார் சொந்த ஜாமினில் விட்டுவிட்டார்கள்,
சரி… அந்த அதிகாரியுடன் ஒரு பெரிய வேன் நிறைய பாதுகாப்பு படை வருமே, அதில் இருந்தவர்கள் எல்லோரும் எந்த உள் நோக்கத்தில் அமைதியாக இருந்துவிட்டார்கள் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம், என்ன செய்வது தமிழகமே உள் நோக்கத்தில் அமைதியாக தானே உள்ளது…

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777