ரஜினி, எந்த சூழ்நிலையிலும் திராவிடத்தை எதிர்க்கமாட்டார்…
1 min read
தமிழகத்தின் அரசியல் களம் எப்போதும், பலருக்கு புரியாத புதிராகவும், புரட்சியை விதைக்கும் நிலமாகவும் தான் இருக்கும் என்பது உலகறிந்த உண்மை. இதை சுதந்திரம் அடைவதற்கு முன்பே நம் முன்னோர்கள் நிரூபித்து உள்ளார்கள். ஆமாம், சுதந்திரம் அடைவதற்க்கு முன்பே, இந்த திராவிட மண் (சென்னை மாகாணம்) சுய உரிமை பெற்று விட்டது, சாதி கொடுமைகள் ஒழிக்கப்பட்டது, ஏற்ற தாழ்வுகள் கலையப்பட்டு விட்டது, உடன்கட்டை ஒழிக்கபட்டது, பெண்ணுரிமை பெறபட்டுவிட்டது, இட ஒதுக்கீட்டை பெற்றுவிட்டது, கல்வி கூடங்கள் அக்கரகாரத்தை தாண்டிவிட்டது, இப்படி இந்த மண்ணில் புரட்சி வெடிக்க துவங்கியது இன்று, நேற்றல்ல, சுதந்திரத்திரத்திற்க்கு முன்பே நாம் பெற்றிட முடிந்ததென்றால் அது அனைத்திற்கும் காரணம், திராவிடம்.

ஆமாம், அந்த திராவிட உணர்வு என்ற ஒற்றை புள்ளி தான் டி.எம்.நாயர், தியாகராயர், நடேசனார், பனகல் ராஜா,முதல் சவுந்தரபாண்டியனார், எம்.சி.ராஜா, பெரியார் வரை அனைவரையும் திராவிடக் கருத்தியல், நீதி கட்சியின் மூலம் ஒரு புள்ளியில் இணைத்தது. அந்த ஒற்றுமையின் மூலம் நாம் பெற்ற பலன்கள் தான், மேற்குறிப்பிட்ட சீர்திருத்தங்கள். தமிழகத்தில் இந்தப் புரட்சி உருவாகி பல ஆண்டுகள் கழித்து தான், வட இந்தியாவில் படிப்படியாக இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தது. அதிலும் இப்போது வரை முழுமையாக சென்று சேரவில்லை என்பது தான் உண்மை. அந்தப் பெருமைக்கு முழுமுதல் காரணம் திராவிட சித்தாந்தம்./ இன்று வரை தமிழகத்தை ஆட்சி செய்துவரும் திராவிட கட்சிகள் தான், அதிக மருத்துவ கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும் உருவாக்கியது. எந்த துறையில் எடுத்து கொண்டாலும் இந்திய அளவில் முன்னணி வரிசையில் தமிழகம் இருந்து வருகிறது. ஏன், தற்போது இந்திய அளவில், மத்திய அரசுக்கு ஜி.டி.பி யை உயர்த்தி கொடுப்பதில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். திராவிட கட்சிகள் தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது என சொல்லப்படும் கருத்துகள், நம்மை பிரித்தாலும் சூழ்ச்சிகள் என்பதை நம் பங்காளிகளும், மதவாதிகளின் பட்டியில் அடைபட்டு இருக்கும் நம்மில் சில ஆடுகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படிபட்ட புரட்சிக் களமான திராவிடம் இன்று பலதரப்பட்டவர்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி இருப்பதற்கும் அதே திராவிட கட்சிகள்தான் காரணம். இந்த திராவிட கட்சிகள் செய்த, செய்யும் 25% சதவீத குறைபாடுகளை எதிரிகள் பெரிதுபடுத்திக் காட்டி மக்களிடையே 100% குறைகளாக கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்த வேலையை தங்கள் உயிர் மூச்சாக கொண்டு செயல்படுவர்களை நாம் எளிதில் அடையாளம் காண முடியும். அவர்கள் தேசிய, மதவாதம், சாதி, இனம் என்று அரசியல் பேசுபவர்களாக தான் இருக்கிறார்கள். /இவர்களுடைய பிரச்சனை என்னவென்றால் ‘இந்த திரவிட அரசியலை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் எல்லாம் விரட்டி விட்டோம். இந்த தமிழ்நாட்டில் மட்டும் அது முடியவில்லையே’ என்ற ஆதங்கம் தான். அதிலும் நம் மற்ற எதிர்பாளர்களைவிட, நம் பங்காளிகளான “தமிழ் தேசியம்” என கொடி பிடிக்கும் நம் பங்காளிகள் தான் இந்த வேலையை செய்கிறார்கள். திராவிடம் என்றால் என்ன? அதன் தலைவர்களின் தியாகங்கள் என்ன? அவர்களால் இந்த தமிழகம் எவ்வளவு பயன் அடைந்துள்ளது! என்று கூட தெரியாத நம்முடைய பங்காளிகள் பலர், “திராவிடத்தை ஒழிப்போம்” என கோஷம் போடுகின்றனர். அது தான் நம்மை கொதிப்படைய செய்கின்றன.
மதவாத கட்சியில் புதியதாய் இணையும் என் பாசமுள்ள பங்காளிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்துகளின் மீது பாசம் வந்ததுபோல் நடிக்கும் மதவாதிகள், தாழ்த்தபட்ட ஒருவரை, எங்கள் கட்சிக்கு மாநில தலைவராக நியமித்து இருக்கிறோம். என்கிறார்களே, அதே நபரை சங்கர மடத்தின் உள் எந்த அளவிற்க்கு உரிமை கொடுப்பார்கள் என கேட்டுபாருங்களேன், அவர்கள் சுயரூபம் உங்களுக்கு தெரியும். அதன்பிறகு நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்துக்கள், மதம் மாற ஒரே ஒரு காரணம் முக்கிய காரணம் என்னவென்று தெரியுமா? தன் சொந்த மத மக்களையே, மதவாதிகள் கோவிலின் உள்ளே நுழையவிடாமல், தீட்டு என ஒதுக்கி வைத்த காலத்திலேயே, வெள்ளைக்காரன் நம்மை சமையல் செய்ய சொல்லி சாப்பிட்டான். இப்படி எவ்வளவோ சொல்லி கொண்டே.. போகலாம். என்னை பொருத்தவரை எந்த சாதியையும் தாழ்த்தி கூற விரும்பவில்லை காரணம் நான் திராவிடன்.

திராவிட தலைவர்கள் குறிப்பிட்ட சாதியினரை பழித்து பேசிவந்த காலத்திலேயே, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சமுதாய மக்களை கோயிலின் உள்ளே அழைத்து கொண்டு ஆலையத்தின் உள்ளே நுழைந்தவர், அய்யா வைத்தியனாத அய்யர். அவரே நூறு வருடங்களுக்கு முன்பே, திராவிட கொள்கையை ஏற்று கொண்டார். அந்த வழியில் இன்று நடிகர் கமலஹாசன் மட்டும் அல்ல, அந்த சமூகத்தில் எவ்வளவோ சகோதர, சகோதரிகள் திராவிட கொளைகைகளை ஏற்று கொண்டு இருக்கிறார்கள். அப்படிபட்டவர்களுக்கு தெரியும், திராவிட கொள்கை என்பது மூடநம்பிக்கைக்கும், சாதி ஏற்ற தாழ்விற்கும், பெண் அடிமைதனம் போன்றவைகளுக்கு எதிரானது தானே தவிர, இந்துமதத்திற்க்கு எதிரானது அல்ல என்று. இதை மதவாத அரசியலில் நுழையத் துடிக்கும் நம்ம சகோதரர்கள் புரிந்து கொண்டால் சரி.

திராவிடர்கள் பெருபாலும் தங்கள் குடும்ப பாசத்திற்கு அடுத்தபடியாக, சாதி, மதம், இனத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பது அந்த தேசியவாத அரசியல்வாதிகளுக்கு (காங்கிரஸ் உட்பட) எல்லோருக்கும் நன்றாக தெரியும் அதனால் தான் நம் மக்களை பிரிக்க பலமுனைகளில் தாக்குதல் நடத்துகின்றனர். அதிலும் சமீபகாலமாக கடவுள் பெயரில் அதிக பாசம் கொண்டது போல் நடிக்கும் இந்த மதவாத அரசியல்வாதிகள் நடத்தும் நாடகங்கள் அதிகம். உதாரனத்திற்கு, சபரிமலை பிரச்சனை, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், கந்தசஷ்டி பிரச்சனை, ஆண்டாள் மீது பாசம் வந்தது தொடங்கி, இப்போது வேல் யாத்திரை, என தொடர்ந்து கொண்டே போகின்றது.

இந்த திராவிட அரசியலை உருவாக்கிய அய்யா அயோதிதாசர் முதல் நீதிகட்சி தலைவர்கள் வரையும் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வரை அனைத்து தலைவர்களும் கடவுளுக்கு எதிரானவர்கள் கிடையாது. அதில் விதி விலக்காக, தந்தை பெரியாரை தவிர வேறு யாரும் கடவுள்களை கடுமையாக எதிர்த்தவர்கள் கிடையாது. அண்ணா, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். கலைஞர், மக்கள் சேவைக்காக சாய்பாபாவிற்க்கு கூட தனது வீட்டின் கதவு திறந்திருக்கும் என்றதுடன், ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் கோயிலுக்கே நேரடியாக சென்று வழிபடும் பழக்கத்தை கொண்டிருந்தனர். திராவிட தலைவர்கள் எல்லோரும் இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கையையும், ஏற்ற தாழ்வுகளையும் தான், எதிர்த்தார்களே தவிர, அவர்கள் ஒரு போதும் இந்து மதத்தை எதிர்க்கவில்லை. பெரியார் மட்டும் இதில் கோபக்காரர். அவர் சாதி ஏற்ற தாழ்விற்கும், பெண் அடிமை தனத்திற்கும் காரணமான இந்து மதத்தை கடுமையாக, பலம் கொண்டு திடமாக எதிர்த்தார்.

ஏன், திராவிட கொள்கையை ஏற்று கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூட, தன்னை இந்து என அடையாளபடுத்தி கொள்கிறார். அதே வேலையில், அதில் இருக்கும் குறைகளை திராவிட தலைவர்களை போல் சுட்டிகாட்டவும் தயங்கியது இல்லை. இது போன்ற சமூக ஏற்ற தாழ்வுகளை தான், நாம் நன்கு அறிந்த ராமனுஜரும், வள்ளலாரும், அய்யா வைகுண்டரும் இந்து மதத்தை சீரமைக்க முயன்று, விமர்சனம் செய்தார்கள். அவர்கள் எல்லாம் கூட புரட்சியாளர்கள் தான்.

உண்மை நிலைமை இப்படி இருக்க, இந்த மதவாத அரசியல்வாதிகள் மீண்டும் நம்மை அடிமைபடுத்த துடிக்கும் அவர்கள், தங்கள் திருட்டுதனமான செயல்களான, மாநில சுயாட்சி கொள்கையை சிதைப்பது முதல் கல்வி கொள்கை வரை அனைத்து பிரச்சனைகளையும் உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் ஆதிக்க மனோபாவத்துடன் செயல்படுவது வெளியில் தெரியாமல் இருக்க, நம்மில் சில, பல ஆடுகளை அவர்களுக்கு அடிமைகளாக தங்கள் பட்டியில் அடைத்து வைத்து கொண்டு அவர்கள் மூலம், “திராவிடத்தை ஒழிப்போம்” என்ற குரலை, (செயற்க்கையாக, டீவிகளில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில், பொது மக்கள் நேரடியாக கை தட்டுவது போலவும் விசில் அடிப்பது போலவும்) சமூக ஊடகங்கள் மூலமாக கூலிக்கு ஆட்களை நியமித்து, அதில் தவறான கருத்துகளை தமிழகத்தில் பரப்புகின்றனர். இதற்கு மூலக்காரணம் மதவாத கட்சிகளின் வலையில் சிக்கிய நமது பங்காளி அப்பாவிகள் தான். அந்த அப்பவிகள் அப்படி சிக்குவதற்கு, இப்போது உள்ள திராவிட கட்சிகளின் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பு உணர்வு தானே தவிர, திராவிடத்தின் மீதான வெறுப்பு இல்லை. மேலும், அவர்களுடைய சுயநலம், அவர்கள் தனிப்பட்ட முறையில் பலனை எதிர்பார்த்து தான், மதவாத அரசியலுக்கு ஆதரவை தருகின்றார்கள் என்பது அவர்களுடைய மனசாட்சிக்கே தெரியும்.

மேலும், தற்போது திராவிட எதிர்பாளர்கள் என தங்களை அடையாளபடுத்தி கொள்பவர்கள், அவர்களுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஆதரவு கொடுப்பார் என, பகல் கனவு காண்கின்றனர். ஆனால் அவர்களுடைய கனவை ரஜினிகாந்த் பகல் கனவாக்க போவது உறுதி. காரணம், அவர் தற்போதுள்ள திராவிட கட்சிகளுக்கு எதிர்பாக களம் அமைப்பாரே தவிர, திராவிடத்திற்க்கு எதிராக களம் அமைத்து நிற்கமாட்டார். இது என்னை போன்ற அவருடைய லட்சக்கணக்கான ஆதரவாளராகவும், அபிமானிகளாகவும், இருப்பவர்களுடைய திடமான நம்பிக்கை. ஏன் என்றால், அவருடைய ஆன்மீக அரசியலில், தேசியம், திராவிடம், பொதுவுடமை கொள்கைகள் எல்லாம் அடங்கி இருக்கிறது.

அவருடைய பங்களிப்பு இல்லாமல், தமிழகத்தில் 2021ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் இல்லை, என்பதே நிதர்சனமான உண்மை.
G.பாலகிருஷ்ணன்
nizhal.in – 8939476777