திருவள்ளுர் மாவட்டத்தில், பனைவிதைக்காக முதல்வர் ஒதுக்கிய 25 லட்சம் அதிகாரிகள் அபேஸ்…
1 min read
நமது மாநில சின்னமான பனைமரம் தமிழகத்தில் பத்தாண்டுகளுக்கு முன், 30 கோடி வரை இருந்துள்ளன. ஆனால், அவை நம்மால் வேகமாக அழிக்கப்பட்டு, தற்போது 5 கோடி மரங்கள் தான் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ், 10 கோடி ரூபாய் செலவில், இரண்டரை கோடி பனைமர விதைகள் தமிழகம் முழுவதும் விதைக்கபடும் என, அறிவித்தார். அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்திற்க்கும் சுமார் 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என கூறப்பட்ட நிலையில், இன்று வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு பனைவிதை கூட விதைக்கபடவில்லை.

இதுவரை ஒரு பனைவிதை கூட விதைக்கப்படவில்லை என்பதற்கு உதாரணம், சென்ற ஆண்டு, “மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை” மூலம், திருவள்ளுர் மாவட்டம் முழுவதும் குடிமராமத்து பணி நடைபெறும் நீர்நிலைகளிலும், மாவட்டம் முழுதும் உள்ள ஊராட்சிகளில் முதல் கட்டமாக 1000 பனை விதைகள் விதைக்க முடிவு செய்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களிடமும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அப்போது அவர் நம்மிடம் கூறுகையில்,
” இந்தாண்டு பனைவிதை விதைக்க நிதி ஒதுக்கியது போல், அடுத்து வரக்கூடிய 2020ம் ஆண்டும் தமிழக அரசு சார்பில் பனைவிதை விதைக்க வேண்டி, நிதி ஒதுக்கீடு செய்வார்கள். அப்போது, நீங்கள் கூறுவது போல், குடிமராமத்து பணி செய்யப்படும் நீர்நிலைகளிலும், மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சியிலும் பனைவிதை விதைக்க ஏற்பாடு செய்யப்படும்” என, உறுதி அளித்தார்.

இந்நிலையில், இந்த ஆண்டு பனை விதை விதைக்க கூடிய காலகட்டமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பனை விதை விதைப்பதற்காக, விதைகளைக் கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை தொடர்புகொண்டும் எந்த பலனும் இல்லை. ஜூலை மாதம் முழுவதும் தோட்டகலை துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றும் பயன் இல்லை, மாவட்ட ஆட்சித் தலைவரை பலமுறை சந்திக்க முயன்றோம் முடியவில்லை, அதனால் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும், அவருடைய உதவியாளரை தொடர்பு கொண்டு தகவல் சொல்ல சொல்லியும்… மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

பின்னர், மக்கள் நலபணி இயக்க அறக்கட்டளையின் சார்பில், திருவள்ளுர் மாவட்டத்தில், அனைத்து ஒன்றிய அளவில் உள்ள ஊராட்சிமன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு, அனைத்து ஊராட்சியிலும் பனைவிதை விதைக்க கோரிக்கை வைக்கபட்டது. அதை தொடர்ந்து, பல ஊராட்சிமன்ற தலைவர்களும் தங்களுடைய சொந்த செலவிலும், மற்றும் பல தொண்டு செய்யும் எண்ணம் கொண்ட அமைப்பினர் மூலமும், மாவட்டம் முழுவதும் பல ஊரட்சிகளிலும், நீர்நிலைகளிலும் பனைவிதை விதைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், முதல்வர் ஒதுக்கீடு செய்த 25 லட்சம் என்ன ஆனது என்பது, மாவட்ட நிர்வாகத்துக்கு தான் வெளிச்சம்…

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777