November 25, 2020

கும்முடிபூண்டி பொது நூலகத்தின் ஆக்கிரமிப்பு, 10 ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பிறகு இன்று அகற்றப்பட்டது…

1 min read

கும்மிடிப்பூண்டி வசந்த பஜாரில் கடந்த 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி பொது நூலகம் திறக்கப்பட்டது. தற்போது இந்த நூலகத்தில் 12,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் இந்த நூலகத்தில் 62 ஆயிரம் புத்தகங்கள் உள்ளது.

இந்நிலையில், இந்த நூலகத்தில் போதிய இடவசதி இல்லாத சூழலில் நூலக விரிவாக்கத்திற்காக அரசு ஆறு சென்ட் இடத்தை நூலகத்திற்கு ஒதுக்கியது. இந்த 6 சென்ட் இடத்தில் ஒன்றே முக்கால் சென்ட் இடத்தை அப்பகுதியை சேர்ந்த முருகன், நாகராஜ், சம்பாலால், உள்ளிட்டோர் ஆக்கிரமித்திருந்தனர். இதுதொடர்பாக ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாதென்றும் அது தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி ஏழுமுறை எதிர் தரப்பினர் வழக்கு தொடர்ந்த நிலையில் ஏழு முறையும் தீர்ப்பு நூலகத் துறைக்கு சாதகமாக வந்தது.

இந்நிலையில், எதிர்தரப்பினர் எட்டாவது முறையாக கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் ஆறாம் தேதி தள்ளுபடி செய்ததோடு மேற்கண்ட நூலக ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வருவாய் துறைக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் தலைமையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கதிர்வேல் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூலக ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டு வருகிறது.

நிகழ்வின்போது மாவட்ட நூலக அலுவலர் திலகா மற்றும் நூலக துறையினர் உடனிருந்தனர். கும்மிடிப்பூண்டியில் நூலக ஆக்கிரமிப்பு கடந்த பத்தாண்டுகளாக அகற்றப்படாமல் இழுபறியில் இருந்த நிலையில் நூலகத் துறையின் சட்டப் போராட்டத்திற்கு பிறகு இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு கும்மிடிப்பூண்டி பொதுமக்களும் நூலக வாசகர்களும் பெரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் தற்போது இந்த நூலக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில் இந்த ஆறு சென்ட் இடத்தில் குறைந்தபட்சம் ஒரு கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் கும்மிடிப்பூண்டியில் வட்டார தலைமை அலுவலகம் அமைக்கப்படும் என்று நூலகத் துறையினர் நிகழ்வின்போது தெரிவித்தனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *