சென்னையின் 5 வது நீராதரமான கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்க உள்ளதால், அதனை திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார்…
1 min read
குடிநீர் ஆதாரங்களாக புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகியவை உள்ள நிலையில், 5-வது நீர்த்தேக்கத்தமாக கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகளை இணைத்து ₹380 கோடியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பணிகள் தொடங்கப்பட்டு, 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வருகின்ற 21-ஆம் தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த நீர்த்தேக்கத்தை திறந்து வைக்க உள்ளார். இதனையடுத்து, திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா, கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அவர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 525 ஏரிகளில் 62 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன எனவும், சென்னையின் குடிநீர் ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன எனவும், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளது எனவும் தெரிவித்தார். அத்திப்பட்டு புதுநகர், திருநின்றவூர், பருத்திப்பட்டு ஆகிய பகுதிகள் மிகவும் பாதிப்படையும் பகுதிகள் என்பதால் தீவிரமாக ஆய்வு செய்து கண்காணித்து வருவதாகவும், கூறினார்.

மேலும், இந்த கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் 1 டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், தற்போது 132 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது எனவும், மழை நீர், ஆந்திராவில் இருந்து வரும் நீர் இங்கு சேமிக்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பப்படும் எனவும், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது எனவும், மீதம் உள்ளவர்களுக்கு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்படும் எனவும், ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777