November 27, 2020

திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி, திருப்பாலைவனம் கிராமத்தை சேர்ந்த, சிவரஞ்சனி மருத்துவ மாணவியாக தேர்வு, கிராம மக்கள் மகிழ்ச்சி…

1 min read

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் கலந்தாய்வு தொடங்கியது. அரசு பள்ளியில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசுகையில், “இந்த நாள் என் வாழ்வில் மகிழ்ச்சிகரமான நாள்” என பெருமிதத்துடன் கூறினார்.

அதன்படி கலந்தாய்வின் தொடக்கமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. புதன் அன்று தொடங்கிய இந்த கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. அரசு கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து 32 எம்.பி.பி.எஸ். இடங்களில் 227 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,147 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 86 இடங்களும் என 313 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 165 பல் மருத்துவ இடங்களில்(பி.டி.எஸ்.) 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1,065 பல் மருத்துவ இடங்களில் 80 இடங்களும் என 92 பி.டி.எஸ். இடங்களும் ஆக மொத்தம் 405 இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. கலந்தாய்வை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் கே.நாராயணபாபு, மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தரவரிசையில் முதல் இடம் பிடித்த மாணவர் ஜீவித், மற்றும் அன்பரசு, திவ்யதர்ஷினி, குணசேகரன், பூபதி, சிவரஞ்சினி (திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி தாலுகா திருபாலைவனம் கிராமத்தை சேர்ந்த மாணவி) சூர்யலட்சுமி ஆகியோர் சென்னை மருத்துவக்கல்லூரியையும், 8-வது இடம் பிடித்த இந்திராதேவி ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியையும், தொடர்ச்சியாக சரத்குமார், ரம்யா ஆகியோர் சென்னை மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்தனர். கலந்தாய்வில் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்த மாணவ-மாணவிகளில் முதல் 18 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவர் சேர்க்கை ஆணையை வழங்கினார். நேற்றும் (வியாழக்கிழமை), இன்றும் (வெள்ளிக்கிழமை) அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் கலந்தாய்வு நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதில், தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்ப்பிற்கான சேர்க்கை ௨ள் ஒதுக்கீட்டில் (7.5%) தரவாிசை பட்டியலில் தமிழக அளவில் 6வது இடத்தை பிடித்த மாணவி சிவரஞ்சனி பொன்னேரி அருகே உள்ள திருப்பாலைவனம் கிராமத்தை சேர்ந்தவர். சிவரஞ்சனியின் தந்தை பெயர் சந்திரசேகரன், அவருடைய தாயார் பெயர் மஞ்சுளா சிவரஞ்சனி அரசு பள்ளியில் படித்து அதிக மதிபெண் எடுத்து மருத்துவ படிப்பிற்காக அரசு இடஒதுக்கீட்டில் 6 வது இடத்தை பிடித்து, மருத்துவராக தேர்வாகி உள்ளதால், சிவரஞ்சனி திருபாலைவனம் கிராமத்தின் முதல் மருத்துவர் என்று கூறி, அக்கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மகளின் சாதனையின் மகிழ்ச்சியில் இருந்த தந்தை சந்திரசேகரன் அவர்களிடம், நாம் பேசிய போது, எனது மகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தார். கடந்தாண்டு +12 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தில் தேர்வாகி இருந்தார். இருந்தாலும் நீட் தேர்வு எழுத, ஒரு ஆண்டு வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் நடந்த நீட் தேர்வு பயிற்ச்சி வகுப்பில் சேர்ந்து பயிற்ச்சி பெற்று, நீட் தேர்வு எழுதினார். அதில் மாநில அளவில் 6வது இடத்தில் தேர்வாகி இருந்தார். அந்த அடிப்படையில் தான், தமிழக முதல்வர் என் மகளுக்கு மருத்துவராக படிக்க வாய்ப்பு வழங்கி உள்ளார். அதற்க்கு தமிழக முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *