May 12, 2021

இன்று, அமித்சா திறக்கும், கண்ணன் கோட்டை அணைகட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துகோட்டை அருகில் உள்ள கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகையில் ஏற்கனவே இருந்த இரண்டு ஏரிகளை இணைத்து ஒரு அணைகட்டு புதியதாக உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் 1 டி.எம்.சி தண்ணீர் சேமித்து வைக்கப்படும் எனவும், அதில் சேமிக்கப்படும் தண்ணீர் சென்னைக்கு குடிநீர் தேவைகாகவும், இப்பகுதியில் 800 ஏக்கர் விவசாயத்திற்க்காவும் பயன்படுத்தபடும் என அதிகாரிகளால் கூறப்படுகிறது. 2013ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, 380 கோடி செலவில் உருவான அந்த அணைகட்டை இன்று மாலை, மத்திய அமைச்சர் அமித்சா திறந்து வைக்க உள்ளார். இதற்கிடையே, அந்த அணைகட்டை திறக்க அப்பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள அப்பகுதி மக்களை நாம் நேரடியாக சந்தித்து பேசிய போது,

அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் ஏற்கனவே இருந்த இரண்டு ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் நீரில் இந்த அணைகட்டை சுற்றியுள்ள, கண்ணன் கோட்டை, தேர்வாய், பாஞ்சாலை, சிறுவாடா, அமரன்பேடு, பூவலம்பேடு, வானியம்மல்லி, உட்பட பல கிராமங்களில் உள்ள சுமார் 3000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று பயன் அடைந்தன. ஆனால் இப்போது அதிகாரிகள் கூறும் போது இந்த அணைகட்டில் சேமிக்கப்படும் நீரால் 800 ஏக்கர் பாசன வசதி கிடைக்கும் என்கிறார்கள். இந்த அணைகட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்பது இப்போது நன்றாக புரியும். உதாரணத்திற்க்கு இந்த ஏரி அமைக்கபட கையகபடுத்தபட்ட நிலம் 1454 ஏக்கர், அதில் 800 ஏக்கர் பட்டா நிலம், 600 ஏக்கர் புறம்போக்கு நிலம், 54 ஏக்கர் வனத்துறைக்கு சொந்தமானது, இவ்வளவு செலவு செய்து, இவ்வளவு நிலத்தை ஆக்ரமித்து, 840 விவசாயிகள் நிலங்களை இழந்து, அதன் மூலம் வேலைவாய்ப்பு பெறும் ஆயிரகணக்கான விவசாய கூலிகள் வேலைவாய்ப்பு இழந்து, பெற கூடிய நீர் 800 ஏக்கர் விவசாயத்திற்க்கு தானா… இதை தான் நாங்கள் இந்த அணைகட்டை கட்டும் நாளில் இருந்து கூறிவருகிறோம் என்கிறார்கள்.

கண்கோட்டையை சேர்ந்த சந்திரசேகர் கூறுகையில், சென்னைக்கு இது 5வது குடிநீர் ஆதாரம் என்கிறார்கள். இந்த அணையில் சேமிக்கப்படும் 1 டி.எம்.சி தண்ணீர் சென்னையின் குடிநீர் தேவைக்கு என்கிறார்கள். ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நதிநீர் இங்கே வரவைத்து பின் அனுப்பபடும் என்கிறார்கள். கிருஷ்ணா நதிநீர் கால்வாயில், தாமரைகுப்பம் அருகில் இருந்து புதியதாய் கால்வாய் அமைத்து அதன் மூலம் இந்த அணைகட்டுக்கு தண்ணீரை சேமிக்க போகிறார்கள், பின் அணைகட்டில் ஒரு பம்பிங் நிலையம் அமைத்து, அதன் மூலம் ஏரியில் இருக்கும் தண்ணீரை மீண்டும் குழாய் மூலம் பம்பிங் செய்து மீண்டும் கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் கொண்டு போய் விடுகிறார்கள். நான் சொல்வது ஏதாவது புரிகிறதா… இது தான், இங்கு அரசு அதிகாரிகள் செய்து கொண்டிருக்கும் வேலை.

கரடிபுதூரை சேர்ந்த கஜேந்திரன் கூறுகையில், எங்கள் கரடிபுதூர் ஏரியில் இருந்து, தேர்வாய் ஏரியின் வழியாக, பழைய கண்ணன் கோட்டை ஏரிக்கு போகும் , ஒரு வரவு கால்வாய் இருந்தது. அந்த கால்வாய் தற்போது வடிவமைக்கபட்ட புதிய ஏரி கட்டமைப்பில் சரியாக கொண்டு போய் இணைக்கவில்லை, அதனால் அந்த வரவுகால்வாயில் வரும் உபரிநீர் ஏரியின் உள் செல்ல முடியாமல், கரடிபுதூர், கோபால் ரெட்டி கண்டிகை கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் தேங்கி நின்று, தொடர்ந்து மூன்று, நான்கு வருடங்களாக பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைகின்றன. இந்த அணைகட்டின் பணிகளில் சரியான திட்டமிடபடவில்லை, மேலும் செய்யவேண்டிய பணிகளே நிறைய முழுமை பெறாமல் அறைகுறையாக உள்ளன என்றார்.

இந்த அணைகட்டின் திறப்பு விழா அறைகுறையாக பணி முடிக்கப்பட்டு அவசரகதியில் நடத்தப்படுகிறது, என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் இந்த திட்டமே வீணான திட்டம் என்றும் இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை, என்கின்றனர். அதற்க்கு காரணம், இந்த அணைகட்டில் 1 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படும் என்கிறார்கள். அந்த தண்ணிர் கிருஷ்னா நதிநீர் கால்வாயில் ஆண்டு தோறும் தமிழகம் பெறப்படும் 12 டி.எம்.சி தண்ணீரில், செம்பரம்பாக்கம் ஏரியில், 3.6 டி.எம்.சியும், பூண்டிஏரியில் 3.2 டி.எம்.சியும், புழல் ஏரியில் 3.3 டி.எம்.சியும், சோழவரம் ஏரியில் 1.0 டி.எம்.சி தண்ணீரும் சேமிக்கப்படுகின்றன. அதில் மீதம் உள்ள 1 டி.எம்.சி தண்ணீரை இந்த கண்ணன் கோட்டை அணைகட்டில் சேமிக்கப்படடும், என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அவர்கள் சொல்லும் காரணம் எல்லாம் சரி தான், இதில் நாம் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்ன வென்றால், கிருஷ்ணா நதிநீர் இது வரை எப்போதும் 12 டி.எம்.சி முழுமையாக தமிழகம் வந்து சேர்ந்தது இல்லை. அதிலும் அந்த 12 டி.எம்.சி தண்ணீர் ஒரே சமயத்தில் வழங்குவது கிடையாது. ஒப்பந்தபடி ஆந்திர அரசாங்கம், ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை 4 டி.எம்.சி யும், ஜூலை முதல் டிசம்பர் வரை 8 டி.எம்.சி தண்ணீரும் தான் தருகிறது. அதை சேமிக்க ஏற்கனவே இருக்கும் நான்கு நீர் ஆதாரங்களே போதுமே, இந்த புதிய அணைகட்டு எதற்க்கு? இந்த அணைகட்டு இந்த பகுதி விவசாயிகளுக்கும் இல்லை, சென்னை குடிநீருக்கும் இல்லை, தேர்வாய் கண்டிகை பகுதியில் புதியதாய் உருவாக்கப்பட்டு உள்ள கம்பெனிகளுக்கு தான், என அழுத்தமாக கூறுகின்றனர். மேலும் அவர்கள் ஆதங்கத்துடன், சரி.. இந்த பகுதியில் மழைகாலங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் மழை நீர்கள் எல்லாம் எங்கே போகும், ஏற்கனவே இந்த ஏரியில் சேமிக்கபடும் தண்ணீரை இப்போது எங்கே சேமிப்பார்கள், அந்த 3000 ஏக்கர் பாசன நீர் எங்கே போகும், என்பது தான் இப்பகுதி விவசாயிகளின் கேள்வியாகவும், அரசையும், அதிகாரிகளையும், இருக்கும் திசை நோக்கி உரக்க கத்தும், கதறலாகவும், உள்ளது. ஆனால் அவர்கள் காதுகளில் தான் கேட்கவில்லை.

மக்களின் தேவைக்கு தான், அரசாங்கமே தவிர மக்களுக்கு தீங்கு செய்யும் திட்டங்களை தினிபதற்க்கு இல்லை, என அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.

G.பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *