January 26, 2021

ஆரணி ஆறு கடைநிலை பகுதி கிராம மக்கள் பாதிக்கபடுவதற்க்கு யார் காரணம்…

1 min read

ஆந்திர மாநிலம் நகிரி மலையில் கார்வெட் நகரில் உருவாகி, தமிழ்நாட்டில் உள்ள பழவேற்காட்டில் கடலில் கலக்கும் ஆரணி ஆறு, ஆந்திராவில் 65.20 கிலோமீட்டரும், தமிழகத்தில் 66.40 கிலோமீட்டரும், மொத்தம் 131.60 கிலோமீட்டர் பாய்ந்து பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதற்கிடையே, ஆரணி ஆற்றின் குறுக்கில்
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கட்டில் நீரை தேக்கி வைத்து, மழைகாலங்களில் அதிகபடியாக வர கூடிய உபரி நீரை மீண்டும் ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.

அதன்படி, அந்த பிச்சடூர் அணையில் இருந்து, கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது எனவும், அதனால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி அணையில் இருந்து வினாடிக்கு, 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, இரண்டு மணி நேரத்தில் மூடபட்டுவிட்டது. அதனால் தண்ணீர் ஆந்திராவின் எல்லையில் உள்ள சுருட்பள்ளி அணையை கடந்து பெரிய அளவில் தமிழக பகுதிக்குள் வரவில்லை. இருந்தாலும்,
ஆந்திர மாநிலத்தில் பெய்துவரும் கன மழையால், பிச்சாட்டூர் அணைக்கட்டு வேகமாக நிரம்பி வந்தது.

பிச்சாட்டூர் முழு கொள்ளளவு, 1.8 டி.எம்.சி, 32 அடி உயரம் கொண்ட அந்த அணைக்கட்டில், அன்றைய நிலவரப்படி, 28.6 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருந்தது. அன்றைய சூழ்நிலையிலேயே, வங்க கடலில் புயல் உருவாகி உள்ளது என்றும், சில தினங்களில் கனத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 24,25 ம் தேதிகளில் தமிழகத்திலும், ஆந்திரவிலும் பலத்த மழை பெய்த்தது. அந்த சமயத்திலெல்லாம், அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றாமல், 26ம் தேதி மாலை ஒரே சமயத்தில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதில், ஊத்துகோட்டை பகுதியில் இருந்த தரைபாலம் சேதம் அடைந்து ஊத்துகோட்டைக்கும் திருவள்ளூர் இடையே போக்குவரத்தும் தடைபட்டது.

அது மட்டும் இல்லாமல் பொன்னேரியை அடுத்த மனோபுரம் துவங்கி, பெரும்பேடு கம்மார்பாளையம், வஞ்சிவாக்கம், பிரளையம்பாக்கம், ஆண்டார்மடம், கம்மார்மடம், வரை உள்ள மேலும் பல கிராமங்கள் ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால் வெள்ளத்தில் மூழ்கின, அதனால் அப்பகுதிகளில் உள்ள ஆயிரகணக்கான நெல் பயிற்கள் மூழ்கி போயின, வெள்ளநீர் வீடுகளில் புகுந்ததால், மக்கள் கடப்பாக்கம், திருபாலைவனம், ஆண்டார்மடம், பழவேற்காடு, உட்பட பல இடங்களில் புயல் பாதுகாப்பு மையங்களிலும், பள்ளிகளிலும், முகாம்கள் அமைக்கபட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

ஆரணி ஆற்றின் திடீர் வெள்ளப்பெருக்கால் இவ்வளவு பாதிப்பிற்க்கும் காரணம், ஆந்திர அரசா, தமிழக அரசா என கேள்வி எழுகிறது, காரணம், பிச்சாடூர் அணையின் திறக்கப்படும் நீர் ஆரணி ஆற்றில் 10 தடுப்பணைகளை கடந்த பின் கடலில் கலக்கிறது. இந்த அணையின் பராமரிப்பு செலவிற்க்கும் தமிழக அரசு பணம் தருகிறது. இப்படிபட்ட சூழலில், அணையில் தண்ணீர் திறப்பதில், ஆற்றின் கரையில் உள்ள தமிழக கிராமங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா.. 26ம் தேதி மாலை 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்ததற்க்கு பதிலாக, 24ம் தேதியில் இருந்தே தொடர்ந்து குறைந்த அளவில் தண்ணீர் திறந்து இருந்தால், ஆரணி ஆற்றின் கடைநிலை பகுதியில் உள்ள கிராமங்களில் இவ்வளவு பாதிப்பு இருந்து இருக்காது.

அதேபோல், தமிழ்நாட்டில் ஆரணி ஆறு பனபாக்கத்தில் 200 மீட்டரும், செங்காத்தா குளத்தில் 225 மீட்டரும், பாலேஸ்வரத்தில் 236 மீட்டரும் ஓடி வரும் ஆரணி ஆறு அத்தம்மசேரி ரெட்டிபாளையத்தில் மிகவும் குறுகி போய் 100 மீட்டரில் தான் ஓடுகிறது, மேலும் அதை கடந்து போகும் போது, ஆறின் அகலம் மேலும் குறைந்து போவதாலும், கரைகளின் கட்டமைப்பு சரியில்லாத காரணத்தாலும் தான் இந்த ஆற்றின் கடைநிலை பகுதி கிராமங்கள் அதிகம் பாதிக்கபடுகின்றன.

இதில், இரண்டு அரசுகளை நாம் குறை கூறுவதை போல், இந்த ஆரணி ஆற்றின் கடைநிலை பகுதியில் அமைந்துள்ள செங்கள் சூளைகளும், கால்வாய்களை ஆக்கரமித்து குத்தி, குதறும் நபர்களையும் நாம் மறந்துவிட கூடாது… இதில் யாரை குற்றம் சொல்லி மக்கள் மாரடித்து அழுவது.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *