January 25, 2021

திருக்கண்டலம் ஏரியில், நீர்வரத்து கால்வாயில் 40 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான 480 ஏக்கர் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்கு வெங்கல், வெங்கல்குப்பம், அத்தங்கிகாவனூர், அழிஞ்சிவாக்கம், பெருமுடிவாக்கம், தாங்கல் வழியாக நீர் வரத்து கால்வாய் உள்ளது. ஆனால், தாங்கல் பகுதியை தனி நபர்கள் சிலர் கடந்த 30 ஆண்டுகளாக அந்த வரத்து காலவாயை ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.

இதனால், திருக்கண்டலம் ஏரிக்கு தண்ணீர்வரத்து தடைப்பட்டிருந்தது. இந்நிலையில், திருக்கண்டலம் ஊராட்சிமன்ற தலைவராக மதன், பெருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பாலலட்சுமி வெங்கடேசன், அழிஞ்சிவாக்கம் ஊராட்சிமன்ற தலைவராக சுதாகர் ஆகியோர் பதவி ஏற்றனர். இவர்களிடம் திருக்கண்டலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கல் பகுதியில் 55 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி திருக்கண்டலம் ஏரியில் தண்ணீர்வரத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை மனு வழங்கியிருந்தனர்.

எனவே, திருக்கண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் மதன் தலைமையில், அவர்களது சொந்த முயற்சியில் ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி தாங்கல்
வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக மழை பெய்ததால் தற்போது ஏரிகள் நிரம்பி தாங்கல்வரத்து கால்வாய் மூலம் திருகண்டலம் ஏரிக்கு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து. மேலும் 2,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் மதன், பாலாலட்சுமிவெங்கடேசன்,சுதாகர் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் திருக்கண்டலம் ஏரிக்கு வந்த தண்ணீரை மலர்தூவி வரவேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமச்சந்திரன், சிவசங்கர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஊரின் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *