April 22, 2021

திருவள்ளூர் மாவட்டத்தில், நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்…

1 min read

நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையாலும், வெள்ளத்தாலும் சேதமடைந்த பகுதிகளை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். அதில் 2 பிரிவாக ஆய்வு செய்த, மத்திய ஆய்வு குழுவினரில் ஒரு குழுவினர் வட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு இயக்குனர் ஷர்ஷா தலைமையில், அமித்குமார், ஒ.பி.சுமன், தர்மவீர்ஜா உள்ளடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

எண்ணூர் முகத்துவாரத்தில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து ஆற்று நீர் கடலில் கலக்கும் இடத்தையும், பக்கிங்காம் கால்வாய் வழியாக முகத்துவாரத்தில் கலக்கும் இடத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். அப்போது பொதுபணி துறையின் முதன்மை செயலர் மணிவாசகம் சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன், திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, பொன்னேரி ஆர்.டி.ஓ.செல்வம், தாசில்தார் மணிகண்டன், சிறப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் உள்ளிட்டோர் இருந்தனர்.

பின்னர், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டனர். அதன்பின் நெய்தவாயல் பகுதியில் சேதமடைந்த வாழை தோட்டங்களையும் ஆய்வு குழுவினர் பார்வையிட்டு, விவசாயிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

பிறகு ஆரணி ஆற்றின் வேள்ளபெருக்கில் கரை உடைந்து பிரளயம்பாக்கம் கிராமம் தண்ணீரில் மூழ்கியது. அது குறித்து, அந்த கரையில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது பிச்சாட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்ததாக ஆட்சியர் பொன்னையா, மத்திய குழுவினரிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, அத்திபட்டு ஊராட்சிமன்ற தலைவர் சுகந்தி வடிவேலு, நெய்தவாயல் தலைவர் பாலன், கடப்பாக்கம் தலைவர் ஜெயந்தி சுரேஷ், பிரளையம் பாக்கம் தலைவர், கண்ணதாசன், ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா, நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் 3.840 ஹெக்டரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் சேதமடைந்து உள்ளதாகவும் அதேபோல் 571 ஹெக்டரில் பயிரிடப்பட்ட தோட்ட பயிர்கள் சேதமடைந்து உள்ளதாகவும் ஆட்சியர் கூறினார், மேலும், கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *