January 28, 2021

கும்மிடிப்பூண்டி அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், எம்எல்ஏ விஜயகுமாரை எதிர்த்த அதிமுகவினரின் ரகளையால், பெரும் பரபரப்பு…

1 min read

கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள பாலாஜி பேலஸில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கும்முடிபூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால் நாயுடு தலைமை தாங்கினார் . நகர செயலாளர் மு.க.சேகர் வரவேற்றார். நிகழ்வில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோவி. நாராயணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், அதிமுக முன்னாள் மாணவரணி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் அதிமுக நிர்வாகிகள் விஸ்வநாதன் தீனதயாளன் நாகமுத்து உள்ளிட்டோர் பேசினார்கள்.

இதில், பொதுக்குழு உறுப்பினர் அபிராமன் பேசும் போது கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு மக்களுக்கு நல்லது செய்யும் புதிய வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் பேருந்து சேவை இல்லாத நிலையில் அது குறித்து தமிழக முதல்வருக்கு நேரில் கோரிக்கைகளை வைத்திருந்த நிலையில் அண்மையில் கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தபாளையம் பகுதியில் அரசு பேருந்து சேவை துவங்கியபோது, அந்த நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார் தன்னை அழைக்கவில்லை என்றும், இதேபோன்றே கண்ணன்கோட்டை நீர்த்தேக்க திட்டத்தின் துவக்க விழாவின் போதும் தன்னை அழைக்கவில்லை என்றும், இப்படி தன்னை பல்வேறு நிகழ்வுகளில் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு கடந்த 4 முறையும் எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்தவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் வருகின்ற தேர்தலில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார்.

அதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார் பேசும்போது, ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தரப்பினர் கும்மிடிபூண்டி எம்எல்ஏ பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ ஒரு சார்பு அரசியல் செய்வதாகவும், அவர் கட்சியை வளர்க்கவில்லை என்றும் சிறு குழுவாக செயல்படுகிறார் என்றும், எந்த விழாக்கள் குறித்தும் யாருக்கும் தகவல் தெரிவிப்பதில்லை என்றும், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
மேலும், எம்எல்ஏ விஜயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், எம்எல்ஏ விஜயகுமாரின் எதிர் தரப்பினருக்கும் எம்எல்ஏ ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகினது. அங்கிருந்த நாற்காலியில் பறந்தன. இதனைக் கண்டு அதிர்ந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் பொன்னேரி எம்எல்ஏவுமான சிறுணியம் பலராமன் மற்றும் தேர்தல் பொறுப்பாளரான கமலக்கண்ணன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவர்கள் அதிமுகவின் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அமர வைத்தனர். சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு இரு தரப்பினரும் அமைதியான பிறகும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தனர்.

இறுதியாக, அதிமுகவினர் முன்னிலையில் பேசிய தேர்தல் பொறுப்பாளர் கமலக்கண்ணன் கூறுகையில், அதிமுகவினர் முடிந்து போன எல்லாவற்றையும் மறந்து இனி ஒற்றுமையாக செயல்பட்டு, வருகின்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் வகையில் உழைக்க வேண்டும் என்றும், எந்த காலத்திலும் ஒற்றுமையை தவறவிட கூடாது, என்று அறிவரை வழங்கினார். மேலும், பூத் கமிட்டி நியமிப்பது, பெண்களுக்கான பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்.
கும்மிடிப்பூண்டியில் அதிமுக பலமிக்கதாக இருந்த சூழ்நிலையில் தற்போது கும்மிடிப்பூண்டியில் அதிமுகவில் இரு பிரிவுகள் உருவாகி உள்ள நிலை உள்ளது. அதனால், இங்கு அதிமுக பலம் வெகுவாக குறைந்துள்ளது என்று கூறி அதிமுக கட்சியினரே வருத்தப்பட்டனர்.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *