தமிழக-ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனை சாவடியில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் போக்குவரத்துத்துறை சார்பில் சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. தமிழக – ஆந்திர எல்லையில் அமைந்துள்ள இந்த சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு உரிமம் வழங்குவதில் லஞ்சம் பெறப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தரப்பில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில்15பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனைச்சாவடியில் அதிகாலை 4மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டி சமர்ப்பித்த விண்ணப்பங்கள், அதற்கு அளிக்கப்பட பெர்மிட் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கான கட்டண தொகை பிரித்தெடுக்கப்பட்டது.
அப்போது அங்கு இருந்த பண கவுண்டரில் கணக்கில் வரமால் இருந்த ரூபாய் 72,800ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போக்குவரத்து சோதனைச்சாவடி ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு 5மணி நேர சோதனையை முடித்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் 72,800 ரூபாயை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

கணக்கில் வராத பணம் வைத்திருந்த போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மீது துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும் அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777