January 25, 2021

நான் தாமதமாக அரசியலுக்கு வந்து இருக்கிறேன் நடிகர் கமல்ஹாசன் பேச்சு…

1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த நடிகர் கமலஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. திரையில் பார்த்த கமலை நேரில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் . மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய அனுமதி கிடைக்காததால் கமல் பொதுமக்களுக்களை கைகூப்பி வணங்கியபடி சென்றார். இதனால் கமலஹாசனை பார்க்க மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை காத்திருந்த ரசிகர்கள் கமலஹாசனை பார்த்தவுடன் உற்சாகம் அடைந்தனர். ரசிகைகள் ஆர்வமுடன் கமலஹாசனை செல்போனில் படம் எடுத்து கொண்டனர்.

ராமகிருஷ்ணா ஹோட்டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்த பின்னர் திருவண்ணாமலை அவலூர்பேட்டை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ராஜா ராணி மஹாலில் இரவு 9 மணி அளவில் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கமலஹாசன் பேசினார் . அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் முழு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். அரசும் அரசியலும் அதன் அடிப்படையில் அமைய வேண்டும். நான் தாமதமாக அரசியலுக்கு வந்து இருக்கிறேன். அரசியலுக்கு வந்தே தீரவேண்டும் என்று வந்துள்ளேன்.

உலக தரத்தில் திரைப்படங்களை கொடுத்தால் மட்டும் போதாது. என்னை வளர்த்து ஆளாக்கிய மக்களுக்கு என்னால் முடிந்த நல்லது செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்துள்ளேன். என் வாழ்க்கை அர்த்தமுடையதாக இருக்க வேண்டும். தமிழகம் தலை நிமிர வேண்டும் என்று விரும்புகிறேன்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கைகோர்க்க வேண்டும் . உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் செய்யாறு மணல் கொள்ளையைத் தடுப்போம். பழங்குடி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வோம். நீங்கள் அன்புடன் என்னை ஆண்டவர் என்றழைக்கிறீர்கள். உண்மையில் நான் உங்களது தொண்டன்,
தமிழகத்தில் முறையான பாசன வசதி இல்லை. நீர் மேலாண்மை கவனிக்கப்படவில்லை.
மராமத்து பணிகளை தமிழக அரசுதான் செய்வது போல் சொல்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட குளங்களையும் சீரமைப்போம். முதல் முறை ஆட்சிக்கு வந்ததுமே அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி விடுவோம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான கூத்துக் கலைஞர்கள் உள்ளனர். நானும் ஒரு கூத்துக் கலைஞன்தான். நான்அவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். என் உள்ளத்தின் மையத்தில் அவர்களை வைத்துள்ளேன். தேர்தலுக்கு முன்பே நமதுகட்சித் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று நமது கொள்கைகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். தேர்தலின் போது பொதுமக்கள் கடைசிநேர கண்கட்டி வித்தையில் மயங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கடைசி நேரத்தில் ஒற்றை விரலில் மக்கள் வைக்கும் முத்திரை மை தான் நாளைய அவர்களின் வாழ்வை நிர்ணயிக்கும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் கமலஹாசன் சுற்றுப்பயணம் தொடர்பான ஏற்பாடுகளை திருவண்ணாமலை தென்கிழக்கு மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் இரா.அருள் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *