January 18, 2022

கும்மிடிப்பூண்டியில், சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கவுன்சிலர்கள் கோரிக்கை…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கெளரி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மாணிக்கம் வரவேற்றார்.

கூட்டத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி சின்னமேடு கிராமத்தில் 18,28,000 மதிப்பிலும், மெதிப்பாளையம் ஊராட்சி வல்லம்பேடு குப்பத்தில் 16.03,000 ரூபாய் மதிப்பிலும் குடிநீர் பணிகள் செய்தல், புதுப்பாளையம் கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்தல், பெத்திக்குப்பம் ஊராட்சியில், இலவச டயாலிசிஸ் மையம் அமைத்தல் உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் கெளரி ஹரிதாஸ் பேசுகையில்,
ஆத்துப்பாக்கத்தில் தமிழக அரசின் மினி மருத்துவமனை ஏற்படுத்துதல், கும்மிடிப்பூண்டி முழுக்க தொடர் மழையில் அனைத்து ஏரிகளும் நிரம்பிய நிலையில், ஆத்துப்பாக்கம் ஏரியின் நீர் வரத்து கால்வாய்கள் அனைத்தும் ஆக்ரமிக்கப்பட்ட நிலையில், ஆத்துப்பாக்கம் ஏரி நீர் நிரம்பாததால் வரத்து கால்வாய்களை தூர்வார கோரியும், ஆத்துப்பாக்கத்தில் பேருந்து வசதி, வங்கி வசதி ஏற்படுத்த வேண்டும் என பேசினார்.

திமுக கவுன்சிலர் அமலா சரவணன் பேசுகையில், தேர்வழியில் மினி பேருந்து வசதி, புதிய குடிநீர் மேல்நிலைத்தொட்டி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த கோரினார். பாமக கவுன்சிலர் சங்கர் பேசுகையில், கும்மிடிப்பூண்டியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் முறையாக செயல்படாததல் கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதால் அதனை சரி செய்ய வேண்டும் என்றும், தொழிற்சாலைகளின் சி.எஸ்.ஆர் நிதியினை ஊராட்சி ஒன்றியம் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்த வேண்டும் என்றார்.


திமுக ஒன்றிய கவுன்சிலர் ஜெயசந்திரன் பேசுகையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தினை பாஜகவினர் தவறாக பயன்படுத்துவதாகவும், பாஜகவில் சேர்ந்தால் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் வழங்கப்படும் என மக்களை ஏமாற்றுவதாகவும் கூறியவர் மத்திய அரசின் திட்டத்தை கட்சி திட்டம் போல பாஜகவினர் நினைத்து செயல்படுவதை தடுக்கும் வகையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் முறையாக செயல்படுத்த வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஒன்றிய குழு தலைவர்கே.எம்.எஸ்.சிவகுமார் இனி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாகவே செயல்படுத்தப்படும்
என்றார்.

திமுக கவுன்சிலர் சிட்டிபாபு பேசுகையில், கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டத்தில் வீடுகளை கட்டியவர்களுக்கு உரிய தொகை வரவில்லை என்றும், கவரப்பேட்டை, பூவலம்பேடு வழியே சாலை நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்றும், மாதர்பாக்கத்தில் இருந்து ஆரம்பாக்கம் வழியே ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டைக்கும், மாதர்பாக்கத்தில் இருந்து சிப்காட் வழியே பொன்னேரிக்கும், திருத்தணிக்கும், மாதர்பாக்கத்தில் இருந்து ஆந்திர மாநிலம்
திருப்பதிக்கும் பேருந்து வசதி கோரினார்.

திமுக கவுன்சிலர் கலா உமாபதி பேசுகையில், கண்ணன்கோட்டையில் மோசமான நிலையில் உள்ள ரேஷன் கடை வளாகத்தை சீரமைத்து தரவும், அரசு நிகழ்ச்சிகளில் ஊராட்சி தலைவர் முறையாக தகவல் அளிக்க வேண்டும் என்றார். திமுக கவுன்சிலர் சிவா பேசுகையில், நேமள்ளூர் ஊராட்சியில் மோசமான நிலையில் மின்கம்பங்கள் பல உள்ள நிலையில், அண்மையில் மின்கம்பத்தில் ஏறி ஒப்பந்த மின் ஊழியர் விபத்துக்குள்ளான நிலையில் பழுதான அனைத்து மின்கம்பங்களையும் மாற்ற வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரவிக்குமார் பேசுகையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளை எதுவும் அரசு விதிமுறைகளை பின்பற்றாத நிலையில் , இது குறித்து அளிக்கப்படும் புகார்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக கூறியவர், சிப்காட் தொழிற்பேட்டையில் அரசு விதிகளை மீறி தொழிற்சாலைகள் ராட்சத ஆழ்துளை கிணறுகளை அமைத்திருந்தும், அதனை சிப்காட் அதிகாரிகள் அகற்றாமல், சிப்காட் வளாகத்தில் சாலையோர கடைகளை அகற்ற முனைப்பு காட்டுகின்றனர், என குற்றம் சாட்டினார்.

திமுக கவுன்சிலர் இந்திரா திருமலை பேசுகையில், கவரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரம் மருத்துவர் வசதி தேவை என்றும், கீழ்முதலம்பேடு, புதுவாயல், பெருவாயல் ஊராட்சிகளில் அரசு ரேஷன் கடை மூலம் வழங்கும் மூக்கடலை முறையாக வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

அதிமுக கவுன்சிலர் நாகராஜ் பேசுகையில், ஆரணி ஆற்றின் குறுக்கே புதுபாளையம்-காரணி பகுதிகளை இணைக்கவும், தண்டலம்-முக்கரம்பாக்கம் பகுதியை இணைக்கவும்
மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்றும், முக்கரம்பாக்கத்தில் துணை சுகாதார நிலையகட்டிடம் பாழடைந்த நிலையில் இருப்பதால், அதனை சீரமைத்து மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்கள் அங்கு பணியமர்த்த வேண்டும் என்றும், அன்னாவரத்தில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்றும், முக்கரம்பாக்கத்தில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு செல்லும் தடம்எண் 131 என்கிற பேருந்து நிறுத்தப்பட்டதால் அதனை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் மதன்மோகன், அதிமுக கவுன்சிலர்கள் ரவக்கிளி ஜெயராமன், ரோஜா ரமேஷ்குமார், ஆரோக்கியமேரி, இ.சீனிவாசன், வி.சீனிவாசன், ரேவதி உத்திரகுமார், தேவிசங்கர், பாமக கவுன்சிலர் மணிமேகலை கேசவன், திமுக கவுன்சிலர்கள் பாசம்அன்பு, ஜெயந்தி, மெய்யழகன், ஜோதி, சுயேச்சை கவுன்சிலர் டி.கே.வி.உஷா ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *