2017ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்தவர்களுக்கு மடிக்கணினி வழங்க திமுகவின், மக்கள் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை…
1 min read
, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மாதர்பாக்கத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் சாரதா முத்துசாமி, திமுக நிர்வாகிகள் மஸ்தான், பரத்குமார், மோகன்பாபு, சந்திரமோகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் இ.ஏ.பி.சிவாஜி, மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஷ்வரி, எம்.எல்.ரவி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் பேசினார்கள்.

இதில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று, அதிமுக ஆட்சியை பாஜக நடத்துவதாகவும், தமிழகத்தில் விலைவாசி உயர்விற்கு காரணமாக மத்திய, மாநில அரசுகள் திகழ்வதாகவும், மக்கள் திமுகவை ஆட்சிக்கு வரவழைத்தால் சுதந்திரமான முறையில் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறும் என்றார்.
இந்த கூட்டத்தில் பேசிய பொதுமக்கள், 2017 ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை என்றும், அதனை வழங்க திமுகவினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாதர்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவேண்டும் என்றும், மாதர்பாக்கத்தில் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்ட இடம் ஒதுக்கப்பட்ட நிலத்தை அரசு சிப்காட்டிற்கு ஒதுக்க முடிவெடுத்ததை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777