January 18, 2022

ஆன்மீகவாதிகள் தேர்தல் அரசியலை விரும்பமாட்டார்கள், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி

1 min read
Spread the love

திருவண்ணாமலை நகரம் வேங்கிக்கால் பகுதியிலுள்ள இமாலயா ஹோட்டலில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், எங்களுடைய கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி, மக்கள் தனி மனிதர்களை விட கொள்கையை நேசிக்கிறார்கள், எனவே தமிழகத்தின் வளர்ச்சிக்காக எங்களுடைய கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார், என்று ஏனென்றால் ஆன்மீகவாதிகள் தேர்தல் அரசியலை விரும்பமாட்டார்கள்
1996இல் ஐயா மூப்பனார் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை துவக்கிய போது மூப்பனார் அவர்களும் கருணாநிதி அவர்களும் சேர்ந்து ஜெயலலிதா அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் விரும்பினார்.
அப்போது ரஜினி அவர்கள் தனியாக கட்சி துவங்கி தேர்தலை சந்தித்து அவரை அரசியலுக்கு வரவேண்டுமென்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அப்போதும் கூட அந்த கருத்தை ஏற்காமல் மூப்பனார் அவர்களும் கருணாநிதி அவர்களும் சேர்ந்து ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த காலகட்டத்தில் ரஜினி அவர்கள் நல்ல உடல் நலத்தோடு இருந்தார் மேலும் அப்போது ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்களும் இருந்தனர்.

பாரதிய ஜனதா கட்சி தற்போது ரஜினி அவர்களுக்கு மிகப்பெரிய அழுத்தம் கொடுத்து ரஜினி உடைய மனதையும் உடல் நிலையையும் கெடுத்துவிட்டது. பாரதிய ஜனதா கட்சிக்கு இது ஒரு மிகப்பெரிய மகத்தான தோல்வி. ரஜினி அவர்கள் பாரதிய ஜனதா கட்சி விரித்த வலையை விட்டு வெளியே வந்துவிட்டார் எனவே ரஜினிகாந்துக்கு என்னுடைய பாராட்டுக்கள். அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கும் என்று பாஜக சொல்வது அவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம், ஆனால் அது அதிமுக மற்றும் அதன் தொண்டர்களுக்கு அது மகிழ்ச்சி அளிக்காது. ஏற்கனவே சுயமரியாதையை இழந்து நிற்கிறது அதிமுக. அப்படிப்பட்ட நிலையில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை எப்படி பாஜக தீர்மானிக்க முடியும் இதனை எப்படி ஏற்றுக்கொண்டு அதிமுக மௌனமாக இருக்கிறது என்பதுதான் எனக்கு புரியவில்லை. ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்து இருந்தால் கூட, திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றிருக்கும் ரஜினியால் வெற்றி பெற்றிருக்க முடியாது.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை திமுக தொண்டர்கள் 100% ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இனிமேல் இன்னொருத்தர் வந்து அக்கட்சியில் முக அழகிரி போன்றவர்கள் பாகம் போட முடியாது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. டெல்லியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை மோடி புறக்கணித்தால், அதனுடைய விளைவு மக்கள் மோடியை புறக்கணிப்பார்கள்.
விவசாயிகள் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே பலமுறை கோரிக்கை வைத்தார்கள். ஆனால் தற்போது பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூபாய் 2500 வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குகிறது இது மிகப்பெரிய ஊழல். மக்கள் கோரிக்கை வைத்த போதெல்லாம் உதவாத தமிழக அரசு தற்போது வாக்குகளைப் பெறுவதற்கு மக்கள் மனதை மாற்றுவதற்கு ரூபாய் 2500 வழங்குவது மிகப் பெரிய ஊழல் இது மிகப்பெரிய தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *