திருவள்ளுர் மாவட்டத்தில், முடிவடையாத சாலைக்கு, சாலைவரி வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்…
1 min read
சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலான இடங்களில் பாலங்கள் பூர்த்தியடையாத நிலையில் பட்டரைப் பெரும்புதூரில் சுங்கச்சாவடி அமைத்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு வசதியாக எந்த தடங்கலுமின்றி செல்லக் கூடிய வகையில் சாலைகள் அமைத்து மத்திய அரசு சுங்கச்சாவடி அமைத்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்வதுண்டு. அதே போல் திருவள்ளூர் அடுத்த பட்டரைப் பெரும்புதூரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுங்கச் சாவடி அமைத்து பணம் வசூல் செய்து வருகின்றனர்.

ஆனால், திருவள்ளூரில் இருந்து பட்டரைப் பெரும்புதூர் வரையில் உள்ள பெரும்பாலான பாலங்கள் முடிவடையாமல் உள்ளது. அதே நேரத்தில் தரைப்பாலங்களை சீரமைக்காமலும், புதிய பாலங்களை கட்டாததால் கடந்த மழைக்கு நாராயணபுரத்தில் உள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லக்கூடிய நிலையில் உள்ளது . எனவே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், பழுதடைந்த சாலைகளை விரைந்து சீிரமைக்க வேண்டியும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பட்டரைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்டுமானம் தொழில் கூட்டமைப்பு தலைவர் பொன்.குமார், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் நலச்சங்க தலவைர் கண்ணன் மற்றும் பொன்னேரி ரியல் எஸ்டேட் அதிபர் குமார், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சுரேஷ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனடியாக மேம்பாலப் பணிகளை முடிக்க வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், அதுவரை 50 சதவிகித சுங்கவரியை வசூல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777