திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவர் பகுதியில், கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதை தடுக்க கோரிக்கை…
1 min read
திருவள்ளுர் மாவட்டம் பழவேற்காடு மீனவர் பகுதியில் அமைந்துள்ள கோட்டைக்குப்பம் ஊராட்சியில், “அதிமுகவை நிராகரிப்போம்” எனும் தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் கவுன்சிலரும் கோட்டைக்குப்பம் ஊராட்சி செயலருமான பழவை பழனி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன்,தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் முன்னிலை வகித்தனர்.

கோட்டைகுப்பம் ஊராட்சியில் உள்ள முக்கிய பிரச்சினைகளான கழிவு நீர் வெளியேறும் குழாய் அமைத்தல், மின்விளக்கு வசதி, பேருந்து வசதி, அரசு மானியம் மூலம் வழங்கப்படும் வீடுகள் குறித்த பிரச்சினைகளை கிராம பொதுமக்கள் எழுப்பினர். குறிப்பாக, பழவேற்காட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதை தடுக்க கோரியும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் உப்புநீர் மண்புழுக்களை கடத்துவதை தடுக்கவும் முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். இந்த கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சரும், ஆதிதிராவிட நலக்குழு மாநில செயலாளர் க.சுந்தரம் மற்றும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ரவி ஆகியோர் தக்க பதில் அளித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்வதாகவும் கூறினர்.

மேலும், இது குறித்து தலைவர் மு க ஸ்டாலின் இடம் அறிக்கை அனுப்புவதாக உறுதி அளித்தனர். கூட்ட முடிவில், அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் கையெழுத்து பிரச்சாரத்தில் அனைவரும் கையெழுத்திட்டனர். பின்னர் கஞ்சா விற்பனை குறித்து சேர்மன் தலைமையிலான திமுகவினர் காவல்துறையினரிடம் இதுகுறித்து வாய்மொழி புகார் அளித்தனர்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட சிறுபான்மை உரிமை நலப்பிரிவு அமைப்பாளர் பழவை முகமது அலவி,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் காத்தவராயன்,தமிழ் உதயன்,மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன்,ஒன்றிய கவுன்சிலர் எம்.கே.தமின்சா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வ நிழல்.இன் – 8939476777
