திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில், அரசு பள்ளி விடுதி நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு…
1 min read
திருவள்ளுர் மாவட்டம் பழவேற்காட்டில் மிகப்பழமை வாய்ந்த ஜெகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு அரசு சார்பில், தங்கும் விடுதி அமைப்பதற்கான இடத்தினை 2013ஆம் ஆண்டு வாக்கில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் சர்வே எண்-143-ல் 90 சென்ட் நிலத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் வழிவகை செய்து பயன்படுத்தி கொள்வதற்க்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதன் பின்னர் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடை பெறாத காரணத்தினால், இடம் காலியாக இருந்தது. இந்நிலையில், தனிநபர் சிலர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த இடத்தில் கூரை வீடுகள் அமைப்பதற்கான முயற்சியில் தனிநபர்கள் ஈடுபட்ட போது பழவேற்காடு ஊராட்சி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து ஆவணங்கள் திரட்டப்பட்டு நேற்று பழவேற்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட விடுதி கட்டும் இடத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் இயற்றப்பட்டது. பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர்,மாலதி சரவணன் தலைமையில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிஎல்சி ரவி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பழவேற்காடு பகுதியில் உள்ள கிராம நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777
