போடிமெட்டு மலை சாலையில், இன்று காலை ஏற்பட்ட பாறைகள் சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது…
1 min read
தமிழகத்தையும், கேரளத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. போடியிலிருந்து 26 கி.மீ. தூரம் நீளம் கொண்ட இந்த மலைச்சாலை 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது. இந்த மலைச்சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் வாகனங்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் சென்று வருவது வழக்கம்.

தொடர் மழை காலங்களில் போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள், மண் சரிவு ஏற்படுவது வழக்கம். கடந்த சில நாட்களாக போடிமெட்டு மலைச்சாலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் இந்த மலைச்சாலையில் மண் சரிவு, பாறை சரிவு ஏற்படும் எனக் கருதி தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே, போடி மெட்டு மலைச்சாலையில் 4 ஆவது கொண்டை ஊசி வளைவுக்கும், எஸ் வளைவுக்கும் இடையே இன்று காலை திடீரென பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன. சாலையின் ஒரு பக்கம் பாறைகளால் தடுப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து சென்ற போடி குரங்கணி காவல்துறையினர் சாலையின் ஒருபக்கம் சிறிய ரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல வழி செய்து கொடுத்தனர். கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை.

இதனையடுத்து, இப்பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து கேரளத்திலிருந்து வந்த கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் போடிமெட்டு சோதனை சாவடியிலும், போடியிலிருந்து கேரளம் சென்ற சரக்கு வாகனங்கள், போடி முந்தல் சோதனை சாவடியிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
அதிகாலையில் ஏராளமான தோட்டத் தொழிலாளர் வாகனங்கள் சென்ற நிலையில் அதன் பின்னர் பாறை சரிவுகள் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
செய்திகள் – அழகர்
நிழல்.இன் – 8939476777