திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி, அடகு வைக்கப்பட்ட நகைகள் மீட்டு தரப்படும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…
1 min read
சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்ததும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன்களும், அடகு வைக்கப்பட்ட நகைகளும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பொன்னேரி அடுத்த பஞ்செட்டி அருகே நத்தம் கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா பஞ்செட்டி அருகே நத்தம் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு, திமுக பொறுப்பு குழு உறுப்பினர்கள் இ.ஏ.பி.சிவாஜி, உமா மகேஷ்வரி, டாக்டர் பரிமளம், வழக்கறிஞர்கள் வெங்கடாசலபதி, அன்புவாணன், எம்.எல்.ரவி, நிலவழகன், கதிரவன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சி.எச்.சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் “தமிழன்” இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் சோழவரம் வடக்கு செல்வசேகரன், கும்மிடிப்பூண்டி மேற்கு மு.மணிபாலன், எல்லாபுரம் ஜெ.மூர்த்தி, ரமேஷ்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். நிகழ்வை ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திமுகவினர் மேள தாளத்துடன் வரவேற்றனர். மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் திமுக தலைவருக்கு செங்கோலை நினைவு பரிசாக வழங்கினார். தொடர்ந்து கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அடுத்த 4 மாதத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும், தமிழக மக்கள் அதற்கு தயாராகிவிட்டனர். திமுக முன்னாள் தலைவர் கலைஞர் காலத்திலும் அதிமுக முன்னாள் தலைவி ஜெயலலிதா காலத்திலும் தமிழகத்தில் நீட் தேர்வை மத்திய அரசால் நுழைக்க முடியவில்லை. ஆனால் தற்போதைய அதிமுக அரசு ஊழல் வழக்குகள் வராமல் இருந்து தப்பித்துக் கொள்ளவே மத்திய அரசுக்கு பணிந்து நீட் தேர்வை தமிழகத்தில் வரவழைத்துள்ளது.”

“தந்தை பெரியார் நினைவாக ஏற்படுத்தப்பட்ட சமத்துவபுரங்களை தற்போதைய அதிமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது.1957 திமுக சந்தித்த முதல் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி தனது முதல் சட்டமன்ற உரையிலேயே விவசாயிகள் பிரச்ச னை பற்றியே பேசினார். அதே போல திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் கேட்காமலேயே விவசாயிகள் வாழும் இடம் விவசாயிகளுக்கே உரிமையானது என்று சட்டம் கொண்டு வரப்பட்டது,” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “எம்.ஜி.ஆரின் அதிமுக ஆட்சியின் போது நாராயணசாமி நாயுடு தலைமையில் விவசாய நிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டிணத்தை 1 பைசா குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய போது விவசாயிகள் போலீஸாரால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், 1989 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் கோரிக்கை வைக்காமலேயே விவசாய நிலங்களுக்கு இலவச மின்சார திட்டத்தை அறிவித்தார்.

அதே போல், ” 2006ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக கூட்டுறவு கடன் 7ஆயிரம் கோடி தள்ளுபடியாக அறிவித்ததை நான் உள்பட திமுக முக்கிய நிர்வாகிகள் நம்பாமல் இருந்த சூழலில் ஆட்சிக்கு வந்து பதவியேற்றதும் விழா மேடையிலேயே 7000கோடி விவசாயகடன் தள்ளுபடியை அறிவித்து எங்களையே திக்குமுக்காட வைத்தார். இவ்வாறு, திமுக ஆட்சி விவசாயிகள் நலன் காக்கும் ஆட்சி என்பதை தொடரும் வகையில் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்ததும், “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுவதோடு, நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதி தந்தபடியே கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மீட்டு தரப்படும்” என்றார்.

மேலும் பேசிய மு.க.ஸ்டாலின், “நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை நசுக்கி கார்பரேட்டுகளுக்கு அடகு வகையில் மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்த்து மாநிலங்களவை மற்றும் மக்களவையில் வாக்களித்த நிலையில், நான் தான் விவசாயி என போகும் இடமெல்லாம் பச்சை துண்டை அணிந்து பெருமை பேசும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு
பச்சை துரோகம் செய்யும் வகையில் வேளாண் சட்டத்தை ஆதரித்து கையெழுத்திட்டதோடு, வேளாண் சட்டங்களை ஆதரித்தும் பேசி வருவது வேதனையானது” என்றவர், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்று ரத்துசெய்யும் வரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் என்றவர் “அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட நாங்க ரெடி நீங்க ரெடியா” என, கேள்வி எழுப்பியதும், திமுகவினர் நாங்களும் ரெடி என பதிலளித்தனர்.

இறுதியாக, திமுக மகளிரணி நிர்வாகி இந்திரா திருமலை வழங்கிய பொங்கலை சுவைத்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறினார். நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி துளசி நாராயணன் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினர் , திமுக நிர்வாகிககள் பாஸ்கரன், திருமலை, கி.வே.ஆனந்தகுமார், ராமஜெயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777