தேனி அருகே இளைஞர் கொலை வழக்கில், கட்டுமான தொழிலாளி கைது 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த, தனிப்படையினருக்கு டி.ஐ.ஜி பாராட்டு…
1 min read
தேனி மாவட்டம் போடி அருகே, இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் கட்டுமான தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படையினருக்கு டி.ஐ.ஜி பாராட்டு தெரிவித்தார்.

போடி அருகே கீழச்சொக்கநாதபுரம் நேருஜி காலனியை சேர்ந்தவர் ஒண்டிவீரன் மகன் ரவிக்குமார் (24). டிப்ளமோ படித்துவிட்டு பெங்களூருவில் வேலை செய்து வந்தார். காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சொந்த ஊருக்கு வந்த ரவிக்குமார் நாட்டு வைத்தியம் பார்த்து வந்தார். ஞயிற்றுக்கிழமை இரவு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. நள்ளிரவு வரை வராததால் இவரது தந்தை தேடிச் சென்றுள்ளார்.

அப்போது கீழச்சொக்கநாத புரத்தையடுத்த சுந்தரராஜ புரத்திலிருந்து சில்லமரத்துப்பட்டி செல்லும் சாலையில், புளியமரத்தடி என்ற இடத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையிலும், மிளகாய் பொடி தூவிய நிலையிலும் ரவிக்குமார் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து, போடி டி.எஸ்.பி. ஜி.பார்த்திபன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். அதில், போடி அம்மாபட்டி இந்திரா காலனியை சேர்ந்த முருகன் மகன் பிரபு (28) என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிரபுவுக்கு பழக்கமான பெண்ணுடன் ரவிக்குமார் கள்ள உறவு வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுவதும், பின்னர் இருவரும் சமாதானம் அடைவதும் வழக்கமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று மது அருந்த ரவிக்குமாரை அழைத்துச் சென்ற பிரபு அரிவாளால் வெட்டி கொலை செய்ததும், பின்னர் யாருக்கும் தெரியாமல் அரிவாளை மறைத்து வைத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் எதுவும் தெரியாதது போல் போலீஸாருடன் சேர்ந்து வழக்கு விசாரணைகளில் உடனிருந்துள்ளார்.

இவரது நடத்தையில் சந்தேகப்பட்ட போலீஸார் செல்போன் தகவல் பரிமாற்ற விபரங்களை வைத்து இவரை பிடித்து விசாரித்ததில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பிரபு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, கொலை சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்த போடி சரக டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையிலான தனிப்படையினருக்கு
திண்டுக்கல் மற்றும் தேனி சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி வாழ்த்து தெரிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்,
இந்நிகழ்ச்சியில், தேனி எஸ்.பி சாய்சரண்தேஜ்வி உடனிருந்தார்.
செய்திகள் – அழகர்
நிழல்.இன் – 8939476777