February 27, 2021

தேனி மாவட்டத்தில், பென்னிகுயிக் 180 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் சிலைக்கு துணை முதல்வர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்…

1 min read

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தேனி மாவட்டம், லோயர் கேம்பில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் மணிமண்டபத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், அவர்கள் முன்னிலையில் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் 180-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (15.01.2021) அன்னாரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் பயன்படுத்திய நாற்காலியினை பார்வையிட்டு, தெரிவித்தாவது,

கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை அரசுப் பொறியாளராக இந்தியாவிற்கு பணிக்கு வந்தார். தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலமுறை மழை பொய்த்து வறட்சி ஏற்பட்டதைக் கண்ட பென்னிகுயிக் அவர்கள், மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாக கடலில் கலப்பதைப் பார்த்து, இதன் குறுக்கில் ஒரு அணையைக் கட்டி தண்ணீர் திருப்பி விட்டால் வறண்ட நிலங்கள் பயனுள்ள விளை நிலங்களாக மாறிவிடும் என திட்டமிட்டார்.இதற்கான, திட்டத்தை ஆங்கிலேய அரசிடம் சமர்ப்பித்து அனுமதி பெற்றார்.

இவரது தலைமையில் பிரிட்டீஸ் ராணுவத்தின் கட்டுமான துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. பல்வேறு இன்னல்களுடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால், உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன்பிறகு ஆங்கிலேயே அரசு இத்திட்டத்தினை கைவிட்டது. அதன்பின் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் முல்லை பெரியாறு அணையை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே உரிய காலத்திற்குள் முடிப்பதற்காக தனது சொந்த நிதியினையும், செலவு செய்து அணையைக் கட்டி முடித்தார். இதனால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட பகுதி நிலங்களுக்கு தேவையான தண்ணீர் இன்றும் கிடைக்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு அம்மா அவர்கள் தென் தமிழகத்தின் வளத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே உரிய காலத்தில் முடிப்பதற்காக, தனது சொந்த நிதியினையும் செலவு செய்த பென்னிகுயிக் அவர்களது நினைவை நன்றியுடன் போற்றும் வகையில், அன்னாருக்கு லோயர் கேம்ப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகப் பகுதியில் சுமார் 2500 சதுர அடி பரப்பில், ஒரு கோடி ரூபாய் செலவில், அவரது திருஉருவ சிலையுடன் கூடிய ஒரு மணிமண்டபம் அமைத்திட உத்தரவிடப்பட்டு, அதனை மாண்புமிகு அம்மா அவர்களின் திருக்கரங்களால் கடந்த 15.01.2013 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வேளாண் பெருங்குடி மக்கள் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் பிறந்த தினத்தினை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் பிறந்த தினமான ஜனவரி 15-ம் தேதி அன்று அன்னரது மணிமண்டபத்தில் அரசு விழாவாக கொண்டாடும் பொருட்டு அவரது திருவுருச் சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 15.01.2020 முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் தேனி மாவட்டம், லோயர் கேம்பில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் மணிமண்டபத்தில், அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. மேலும், கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் சுமார் 135 வருடங்களுக்கு முன்னால் பயன்படுத்திய நாற்காலியினை விவசாயிகள் பெருங்குடி மக்களின் கோரிக்கைக்கிணங்க, முல்லை பெரியாறு அணையிலிருந்து தற்போது மணிமண்டபத்தில் பொதுமக்களின் பார்வைக்காக இவ்வாண்டு முதல் வைக்கப்பட்டுள்ளது. என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இவ்விழாவில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஊராட்சித்தலைவர் க.ப்ரிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், மதுரை பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) பெரியாறு வைகை வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மா.சுகுமாரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில்அண்ணா, உதவி செயற்பொறியாளர் மா.மொக்கமாயன், உதவி பொறியாளர்கள். இரா.பிரேம்ராஜ்குமார், கதிரேஷ்குமார் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், ஏராளமான பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – அழகர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *