திருவள்ளுர் மாவட்டத்தில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான, 757 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன…
1 min read
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 757 பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட பள்ளிகள் இன்று தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்த நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 757 பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.

இதில், 149 உயர்நிலைப் பள்ளிகளும், 113 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. 13 அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளும், 24 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. மொத்தமுள்ள 757 பள்ளிகளில் 1,09,934 மாணவர்கள் உள்ளனர்.

இதில், அரசு பள்ளியில் மட்டும் 44,492 மாணவர்கள் உள்ளனர். இன்று திறக்கப்பட்டுள்ள பள்ளிகளில், மாணவ, மாணவிகள் அதிக அளவில் பள்ளிகளுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் முகக் கவசங்கள் அணிவித்தும், வெப்பமானி கொண்டு உடல் வெப்ப நிலையை கண்டறிந்தும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தியும் ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்கு அனுப்பி வைத்தனர். அதே போல ஒவ்வொரு வகுப்பறையிலும் 25 மாணவர்கள் என்ற வீதத்தில் இடைவெளி விட்டு மாணவர்கள் அமர்ந்து பாடம் நடத்தப்படுகிறது.

முதல் நாளான இன்று, மன அழுத்தத்தைப் போக்கும் கவுன்சிலிங் பாடமும், நாளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பாடமும் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. 2 நாட்களுக்கு பின்பு மாணவர்களின் மனநிலையை அறிந்து பாடங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏதாவது இருந்தால் அவர்களுக்கு மாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்களிடம் இருந்து எழுத்துபூர்வ அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என்றும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777