முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம், ஜனவரி 27ம் தேதி திறக்கபடுவதின் மர்மம்…
1 min read
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வருகின்ற ஜன.27-ம் தேதி திறக்கப்படும், என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்க உள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தில் 6 முறை முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ரூ.79.75 கோடி மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.
ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன்பே நினைவிடம் திறப்பு அடுத்த ஒரு மாதத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என்று கடந்த 9-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன்பாகவே நினைவிடத்தைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
முதல்வர் பழனிசாமி நேற்று டெல்லி சென்ற நிலையில், ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜன.27-ம் தேதி திறந்து வைக்க உள்ளார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை 27.1.2021 புதன்கிழமை காலை 11 மணியளவில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றுத் திறந்து வைக்க உள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், சட்டப்பேரவைத் துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் நினைவிடத்தை, அவர் மறைந்த தினமான டிசம்பர் 5ம் தேதி திறந்திருக்கலாம். இல்லை என்றால், அவர் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி திறந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி முக்கிய நாட்களை விட்டுவிட்டு ஜனவரி 27 சசிகலா விடுதலையாகும் நாளில், ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பதற்க்கு காரணம் என்ன வென்று தமிழக மக்கள் புரிந்து கொள்ளமாட்டார்களா என்ன…
G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777