காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் குறித்து, “வரும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் பிரச்சினை எழுப்புவோம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
1 min read
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை பல்வேறு கட்சிகளும், மீனவ அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க பகுதிகளான செங்கழநீர்மேடு பகுதியில் ஆய்வு செய்தார்.

3 கி.மீ.நடந்தே சென்று, கழிமுக பகுதிகளை பார்வையிட்ட அவர், அங்குள்ள மீனவர்களிடம் துறைமுக விரிவாக்கம் வந்தால் ஏற்படும் நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னையும் பாதிக்கும் எனவும், சுற்றுச்சூழல் கடுமையாக பாதித்து, கடல் அரிப்பு ஏற்படும் என்றார்.

துறைமுக விரிவாக்கத்தால் கடல் நீர் நிலப்பரப்பில் உட்புகும் எனவும், பழவேற்காடும் கடலும் ஒன்று கலந்து விடும் எனவும் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி, கொசஸ்தலை ஆறுகளின் தண்ணீர் கடலில் கலக்கப்படுவது தடுக்கப்பட்டு, கிராமங்களில் உட்புகும் எனவும், மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையான எதிர்க்கிறது எனவும், இதற்காக போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வழக்கு தொடரப்படும் எனவும், வரும் 29-ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் துறைமுக விரிவாக்கம் குறித்து பிரச்சினை எழுப்பப்படும். எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.

அப்போது அவருடன், பூவுலகின் நண்பர்கள் குழுவின் நிர்வாகி சுந்தர்ராஜன், மற்றும் அவர் குழுவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் வன்னியரசு, பாலசிங்கம், நெடுஞ்செழியன், வல்லூர் ஏழுமலை, பழவை மகேந்திரன் ஊரனம்பேடு பிரசாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777
