பெரியபாளையம் அருகே, கோவிலில் இருந்து திருடப்பட்ட 3 சாமி சிலைகள், நகைகள் மீட்பு, 7பேர் கைது…
1 min read
திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அன்னதான காக்கவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள, சீனிவாச பெருமாள் கோவிலில் அண்மையில் சாமி சிலைகள் திருடப்பட்டன. இதே போல அருகில் உள்ள அம்மன் கோவில்களில் இருந்தும் நகைகள் திருடப்பட்டது.

இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், பெரியபாளையத்தில் போலீசார் வாகன சோதனையில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்த ஒரு கும்பலை மடக்கி தீவிர விசாரணை நடத்தியதில், கோவில்களில் கொள்ளையடிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது.

அதையடுத்து, அவர்களிடம் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 சாமி சிலைகள், 3சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவில்களில் கொள்ளையடித்த கவிசெல்வமணி, அம்பேத்கர், சண்முகராஜ், கார்த்திக், ராஜி, ஏழுமலை, விஜயன் ஆகிய 7பேரை போலீசார் கைது செய்தனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – ,8939476777