20 ஆண்டுகளுக்கு பிறகு, தேனி முல்லை பெரியாறு அணைக்கு, மின்சார இணைப்பு வழங்கும் விழா…
1 min read
தேனி மாவட்டம், முல்லை பெரியாறு அணைக்கு பூமிக்கு அடியில் மின்சார கம்பிகள் மூலம் மின்சார இணைப்பு சேவைக்கான துவக்க நிகழ்ச்சி இன்று (01.02.2021) முல்லை பெரியாறு அணைப்பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், அவர்கள் பங்கேற்று, இது குறித்து தெரிவித்ததாது, தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள, விவசாயகளின் வாழ்வாதாரமாக விளங்ககூடிய முல்லை பெரியாறு அணையை பாதுகாத்திடும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த, 19.06.2000 அன்று வனவிலங்கு மின் விபத்து காரணமாக இறந்ததால், அப்போதில் இருந்து மின்சார சேவை முல்லை பெரியாறு அணைப்பகுதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது, 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் மின் இணைப்பு வழங்கும் பொருட்டு, விலங்குகளுக்கு பாதுகாப்பான முறையில் வனத்துறையின் அனுமதி பெற்று பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், இப் பணிக்கென தமிழக அரசின் சார்பில் கேரள மின்சாரதுறைக்கு 2005ம் ஆண்டில் ரூ.91,00,000-, 2007ம் ஆண்டில் ரூ.4,09,420-, 2016ம் ஆண்டில் ரூ.69,90,580-, ஆக மொத்தம் ரூ.1,65,00,000- செலுத்தப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையின் இடத்தை பயன்படுத்துவதற்கு ரூ.13,47,035- செலுத்தப்பட்டு, மின் பணிகள் முடிக்கப்பட்டு, மின்மாற்றி பெரியாறு அணையில் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெரியாறு அணைக்கு இன்று (01.02.2021) முதல் மின்சாரம் இணைப்பு பூமிக்கு அடியில் மின்சார கம்பிகள் மூலம் 5.5கிமீ நீளத்திற்கு வழங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இப்பணியினை மாண்புமிகு கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி அவர்கள் துவக்கி வைத்தார். இதன்மூலம், முல்லை பெரியாறு அணைக்கான மின் இணைப்பு சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கேரள பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் இ.எஸ்.பிஜிமோள், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) தலைமைப் பொறியாளர் ம.கிருஷ்ணன், கண்காணிப்புப்பொறியாளர் மா.சுகுமார், செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வின், கேரள மின்சாரத்துறை இயக்குநர்கள் ஸ்ரீ பி.குமாரன், மரு.வி.சிவதாசன் மற்றும் கேரள மின்சாரத்துறை சார்பாக தலைமை பொறியாளர் ஜேம்ஸ் எம் டேவிட், துணை தலைமைப்பொறியாளர்கள் டி.மனோஜ் மற்றும் செயற்பொறியாளர் எம்.பார்வதி மற்றும் பொறியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், தமிழக-கேரள அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – அழகர்
நிழல்.இன் – 8939476777