March 1, 2021

திருவள்ளூர் அருகே, மன உளைச்சலுக்கு ஆளான, ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை, உறவினர்கள் சாலை மறியல்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன், இவர் மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி உதவியாளராக பணியாற்றி வந்தார். இந் நிலையில், இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊராட்சிமன்ற ஊழியர்கள் உடனடியாக, திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல் துறையினர், இறந்து போன நிலையில் கிடந்த பாஸ்கரனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்ற பொது, ஊராட்சி மன்ற அலுவலகத்தை, பாஸ்கரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய பின்னர், பாஸ்கரனின் உடலை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

இதற்கிடையே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாஸ்கரன் தனது கைப்பட எழுதி இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றி இருந்தனர். அந்தக் கடிதத்தில், ” கடந்த 1998 முதல் ஊராட்சி செயலராக தான் பணியாற்றி வந்ததாகவும், இதுவரை எனது பணியில் தவறு ஏதும் இல்லாத வகையில் பணி புரிந்து வந்ததாகவும், கடந்த 2020 ஜனவரி 1-ஆம் தேதி முதல், இன்று வரை ஊராட்சியில் மன உளைச்சலுக்கு தம்மை ஆளாக்கி, தம்மை இந்த முடிவுக்கு தள்ளிவிட்டார்கள் என்பதை இக்கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் ” என குறிப்பிடப்பட்டு எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, போலீசார் இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு எதிரில் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் பாஸ்கரின் உறவினர்கள் மற்றும் கடம்பத்தூர் ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், திருவள்ளூர் திருப்பதி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த காவல் துறையினர், ஊராட்சி செயலாளர் இறந்துபோன சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

G, பாலகருஷ்ணன் நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed