February 24, 2021

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடந்தது, ஜல்லிக்கட்டா? சூதாட்டமா?ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அதிருப்தி…

1 min read

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே, உள்ள அய்யம்பட்டியில் சூதாட்டம் போல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அப்பாவி இளைஞர் ஒருவர் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 49 நபர்கள் காயமடைந்த நிலையில், 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அய்யம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஏழைகாத்தம்மன், வல்லடிக்காரர் சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு முன்பதிவு செய்ய அதிக அளவில் 1000 கும் மேற்பட்ட காளைகள் வந்ததால் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ரூபாய் 3,000 முதல் 10,000 வரை பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.

முன்னதாக, தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி ஜல்லிக்கட்டு விழா நிகழ்ச்சிகளும் இதேபோன்ற நிலையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது . தேனி மாவட்ட காளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டி நேர்மையாகவும் உண்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டு மாடுகள் வளர்ப்போர் சங்கம் சார்பில் கோட்டூரில் போராட்டம் நடத்தப்பட்டது. நாட்டு மாடுகளின் இனத்தை அழிவில் இருந்து பாதுகாக்கவும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் போன்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் மூலம் தங்களது காளைகளை ஊக்கப்படுத்தவும் மாட்டின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள வரும் மாடுகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கியது மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாக மாட்டின் உரிமையாளர்கள் புலம்புகின்றனர் .

இனி வருங்காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாவட்ட நிர்வாகமே முன்னின்று நடத்த வேண்டும் என்றும் மாட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அய்யம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 653 காளைகள் கலந்து கொண்டன, இதில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்காக நன்கொடை வழங்கியவர்களுக்கு மாட்டுக்கான டோக்கன் வழங்குவது வழக்கம், அவ்வாறு நன்கொடையாளர்களுக்கு வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட டோக்கன்கள் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு 10 மணிக்கு மேல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு கலந்து கொண்டனர். இவ்விழா காலை 8 மணி அளவில் தொடங்கி மாலை 3.30 மணியளவில் நிறைவு பெற்றது. தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளைகளை மாட்டின் உரிமையாளர்கள் பிடிக்க அங்குள்ள குளத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலிக்குள் போட்டியில் கலந்து கொண்டு வரும் காளைகளை மாட்டின் உரிமையாளர்கள் கயிறு போட்டு பிடித்து வாகனங்களில் ஏற்றி தங்கள் வீடுகளுக்கு அழைத்து செல்வார்கள். அவ்வாறு மாடுகளைப் பிடிக்கும் இடத்தில் பார்வையாளர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். இதில் சின்னமனூர் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் முருகேசன் (29) என்பவரை ஜல்லிக்கட்டு காளை முட்டி தூக்கி வீசியது. முதுகுப் பகுதியில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல மாடுபிடி வீரர்கள் 33 பேர் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் 16 பேர் என மொத்தம் 49 பேர் காயங்களுடன் தேனி மற்றும் சின்னமனூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டபோது அப்போதைய முதலமைச்சரும், தற்போதைய துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடும் முயற்சியால் மீட்டுக் கொண்டு வந்த ஜல்லிக்கட்டை ஒரு சிலர் தவறாக பயன்படுத்துவது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துவதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் – அழகர்
நிழல், இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *