போடி அருகே, மெட்டு மலைச்சாலையில், மோட்டார் பைக் விபத்து, இருவர் இறந்தனர்…
1 min read
தேனி மாவட்டம் , போடிமெட்டு மலைச்சாலையில் இரு சக்கர வாகனம் பாறையில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் இறந்து போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போடி அருகே டொம்புச்சேரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் பழனிச்சாமி (60). இவரும் இதே ஊரைச் சேர்ந்த முத்தையா மகன் காளியப்பன் (55). மற்றொரு பழனிச்சாமி மகன் மணிமுத்து (35) ஆகியோர் கேரள மாநிலம் பி.எல்.ராம் என்ற இடத்தில் உள்ள செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான ஏலத் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளனர். பிற்பகலில், பணி முடிந்து மோட்டார் பைக்கில் மூவரும் ஊருக்கு திரும்பி வந்துள்ளனர்.

மோட்டார் பைக்கை மணிமுத்து ஓட்டி வந்துள்ளார். பழனிச்சாமியும், காளியப்பனும் பின்னால் அமர்ந்து வந்துள்ளனர். போடிமெட்டு மலைச்சாலையில் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது மோட்டார் பைக் நிலை தடுமாறி மலைப்பாதையில் இருந்த பாறையில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். மூன்று பேரையும் போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்ததில் பழனிச்சாமி, காளியப்பன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள். மணிமுத்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து போடி குரங்கணி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் – அழகர்
நிழல். இன் – 8939476777