தேனி மாவட்டம் போடியில், பழமையான உலோக நடராஜர் சிலை கடத்தல், ஒருவர் கைது, மூன்று பேர் தப்பி ஓட்டம்…
1 min read
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், பழமையான உலோக நடராஜர் சிலையை கடத்தி சென்றவரை சினிமா பாணியில் காரில் விரட்டி சென்ற போலீஸார் ஒருவரை கைது செய்தனர். போலீசார் கண் முன்னே மூன்று நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். மீட்கப்பட்ட சிலை ஐம்பொன் சிலையா, வெண்கல சிலையா என ஆய்வு செய்து வருகின்றனர்.

போடியிலிருந்து மூணாறு சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார், அப்பகுதியில் நின்றிருந்த போலீஸாரை கண்டதும் வேகமாக சென்றுள்ளது. அதனால் சந்தேகமடைந்த போலீஸார்கள் காரை விரட்டி சென்றுள்ளனர். போடி கீழத்தெரு பகுதியில் சென்ற போது கார் சாலையோர வீட்டு படிக்கட்டில் மோதி நின்றுவிட்டது. காரிலிருந்த 3 பேர் போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்க வேண்டி, காரிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

போலீஸார் காரை சோதனை செய்ததில் காரில் 3 அடி உயரமுள்ள பழமையான உலோக சிலை இருந்துள்ளது. சிலையை மீட்டு காரில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் சிலை 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடராஜர் சிலை என்பது தெரிந்தது. ஐம்பொன் சிலையா அல்லது வெண்கல சிலையா என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலையை கடத்தி சென்றதில், பிடிபட்டவர் போடி எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த மோகன் என்பவரது மகன் மணிகண்டன் (26) என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து மோடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், போலீசார் கண் முன்னே தப்பி ஓடிய 3 பேரை தேடியும் வருகின்றனர்.

செய்தியாளர் – அழகர்
நிழல். இன் – 8939476777