June 17, 2021

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம், அன்பையும், பாசத்தையும் கலவையாக கலந்து கட்டப்பட்ட, “கூட்டுக் குடும்பத்தின் கோட்டை”…

1 min read

உலகில் தாய்பாசத்தில் முதல் இடத்தில் இருப்பது நண்டு மட்டுமே ! என்ன காரணம் தெரியுமா ? பிரசவத்திற்கு முன்னதாக தன் வயிற்றில் இருக்கும் குஞ்சுகளை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் !
பிரசவ வலி ஏற்படும் போது குஞ்சுகள் வெளியே வர வேண்டிய சூழ்நிலை, ஆனால் அவைகள் வெளியே வர முடியாது !
காரணம், நண்டிற்கு பிரசவிக்க மற்ற உயிரினங்களுக்கு உள்ள துவாரங்கள் போல், எதுவும் இல்லை ! காலம் கடக்க கடக்க, வயிற்றில் உள்ள குஞ்சுகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும் ! தன் வயிற்றிலேயே அவைகள் இந்த உலகை பார்க்காமல் இறந்து போய் விடுமோ என்று அஞ்சி, தன்னைத் தானே அழித்துக் கொண்டு, அதாவது, தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு, தன் வயிற்றில் அடைப்பட்டுள்ள குஞ்சுகளை வெளியே வர வைக்கும் !
நூற்றுக்கும் மேற்பட்ட குஞ்சுகள் பரவலாக வெளியே வரும் ! அவைகளின் பயணத்தின் துவக்கத்தைப் பார்க்கும் தாய் நண்டு அவைகளின் தொடர் செயல்களைப் பார்க்காமல் இறந்து போய்விடும் !

உலகில் தன் உயிரைக் கொடுத்து தன் குஞ்சுகளை காப்பாற்றும் குணம் கொண்ட ஒரே உயிரினம் என்றால் அது நண்டு மட்டுமே !
மறைந்த நம்முடைய நிறுவனத் தலைவர் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்கள் தன் உயிரைக் கொடுத்து நமக்கு அமைத்துக் கொடுத்த அமைப்பு தான் இந்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ! இந்த அமைப்பை அவருடைய காலத்திற்கு பிறகு, நாம் எடுத்து நடத்த நமக்கு அவர் வங்கியில் சேமிப்பு வைத்து விட்டு செல்லவில்லை ! ஆனால் தன்மானத்துடன், நேர்மையாக, உண்மையாக ஒரு அமைப்பை எப்படி நடத்த வேண்டும் என்று அவருடைய வாழ்க்கையில் உயர்த்திவிட்டு சென்றுள்ளார் ! நமக்கு எல்லாம் தன்நம்பிக்கையை அவர் வளர்த்து விட்டுச் சென்றார் ! பணம் இருந்திருந்தால் இந்நேரம் அவைகள் காணாமல் போய் இருக்கும் ! ஆனால் நான்காயிரம் குடும்ப உறவுகள் நமக்கு தொடர்ந்து இருந்து இருக்காது !
இன்றும் அரசியலில் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், தோழர் ஜீவா, அமைச்சர் கக்கன், போன்ற தலைவர்களை பற்றியெல்லாம் நாம் பேசுகின்றோமோ, அதே போல், பத்திரிகை உலகில் நம்முடைய தலைவர் தோழர் டி.எஸ்.ஆர் காலத்துக்கும் பேசப்பட்டுக் கொண்டே இருப்பார் !

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கொடுத்த அறிவுரையின் படி, உருவாக்கப்பட்ட இந்த விதை 1990 ல் தமிழக மண்ணில் நடப்பட்டது !
மிகக்குறைந்த உறுப்பினர்கள், ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே அமைப்பு என்று துவங்கப்பட்டது ! அதன் பின்னர் தமிழகம் முழுவதும் வளர்ச்சி அடைந்து அரசின் பார்வைக்கு வந்தது ! தலைவர் மறைந்த 2012 ஆம் ஆண்டு, சங்கத்தின் வயது 22 ! அவருடைய மறைவிற்கு பிறகு ஒண்பது ஆண்டுகள் அவருடைய வழியில் சில புதிய நிர்வாகிகளையும் இணைத்துக் கொண்டு, அதே பாதையில், சுய மரியாதையுடன், தன்னலமற்ற சேவையில் நாம் அனைவரும் ஒரே குடையின் கீழ், பயணித்து வருகிறோம் !
தலைவர் மறைவிற்கு பிறகு, ஒன்பது ஆண்டுகளில், 2013 ல் சென்னையில் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு துவங்கி இன்று வரை அவருடைய பிறந்த நாள் மற்றும் நினைவு தினங்கள் அனைத்து பிரபலமான முக்கிய தலைவர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது !

2014 குற்றாலத்தில் நம்முடைய 14 வது மாநாடு நடைபெற்றது, இன்று 2021 ல் அதே இடத்தில் 18 வது மாநில மாநாடு நடைபெறுகிறது !
ஒன்பது ஆண்டுகளில் தலைவரின் எட்டு பிறந்தநாள் மற்றும் மறைந்த நாள் நிகழ்வுகள், மட்டுமின்றி….தமிழகமே வியக்கத்தக்க வகையில் ஐந்து மாநில மாநாடுகள், ஆளுனர் முதல் அனைத்து தலைவர்களையும் ஒன்றிணைத்த மேடைகள், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தொடர் நிகழ்வுகள், சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்வுகள், இருபதுக்கும் மேற்பட்ட மண்டல அளவிலான நிகழ்ச்சிகள்,

தேசிய சங்கத்தில் தொடர்ந்து அங்கீகாரம், விபத்து காப்பீடு திட்டம், உறுப்பினர் அடையாள அட்டைகளை மேடையில் ஆட்சியர் போன்ற அதிகாரிகளின் கைகளில் வழங்கும் தைரியம், மக்கள் பிரச்சினைகளும் குரல் கொடுக்கும் தன்மை, வருடா வருடம் பல மாவட்டங்களில் சங்க வளர்ச்சி குறித்து கூட்டங்கள், அரசியல் கட்சிகள் போல தோழர்களை உற்சாகப் படுத்த பல புதிய யுக்திகள், நியமன கடிதங்கள், பொறுப்புகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட அடையாள அட்டைகள், இவைகள் அனைத்தையும் கடந்து, 200 க்கும் மேற்பட்ட ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நாம் அனைவரும் இணைந்து இரும்புக் கரங்கள் கொண்டு நடத்தப்பட்டு வந்துள்ளோம் !

இரண்டாயிரம், மூன்றாயிரம் தோழர்கள் தங்கள் சொந்த செலவில் பயணித்து தங்கள் விலை மதிக்க முடியாத நேரத்தை செலவு செய்து நம்முடைய மாநாடுகளில் கூடுவதை பார்க்க, தாய் நண்டு போல டி.எஸ்.ஆர் இல்லையே ! ஆனால் நம்மை வழி நடத்தி செல்ல ஐயா கு.வெங்கட்ராமன் போன்றவர்களும், தலைவருக்கு தோள் கொடுத்து வந்த அம்மா திருமதி சசிகலா தேவி ரவீந்திரதாஸ் அவர்களும் இருப்பது மட்டுமே மகிழ்ச்சி !

தலைவரின் கனவுகளை நினைவாக்குவோம் !
குற்றாலத்தில் வரும் 20 ஆம் தேதி, அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைவோம் !
வெற்றி பெறுவோம் !வரலாறு படைப்போம் !

தோழமையுடன்,
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநில தலைவர்
டி.யூ.ஜே

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *