தமிழகத்தில், 110 விதியின் கீழ், திட்டங்களை அறிவித்து, மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்கள்…
1 min read
நமது மாநில சின்னமான பனைமரம் தமிழகத்தில் பத்தாண்டுகளுக்கு முன், 30 கோடி வரை இருந்துள்ளன. ஆனால், அவை நம்மால் வேகமாக அழிக்கப்பட்டு, தற்போது 5 கோடி மரங்கள் தான் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ், 10 கோடி ரூபாய் செலவில், இரண்டரை கோடி பனைமர விதைகள் தமிழகம் முழுவதும் விதைக்கபடும் என, அறிவித்தார். அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்திற்க்கும் சுமார் 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்த்த நிலையில், இன்று வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு பனைவிதை கூட விதைக்கபடவில்லை.

இந்த அறிவிப்பை எதிர்பார்த்து, திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மக்கள் நற்பணி இயக்க அறக்கட்டளையின் சார்பில், நீர்நிலைகளில் விதைப்பதற்காக, நான் மாவட்ட ஆட்சியரிடம் 20 ஆயிரம் பனை விதைகள் கேட்டு இருந்தேன். ஆனால் மாவட்ட நிர்வாகம் அப்படி ஏதும் பனை விதைகள் அரசு துறையில் வழங்கப்படவில்லை என கூறிவிட்டனர்.

அதனால் எனது சொந்த முயற்ச்சியில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைவிதைகளை விதைத்து உள்ளேன். எனக்கு அரசு தரப்பிலிருந்து, பனை விதைகள் வழங்கப்படாததால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்திடம் பனை விதைகள் வழங்கப்படாது அதற்கான காரணங்களை கேட்டிருந்தேன். இதற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் தமிழக அரசின் வேளாண் துறையின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பனை விதைகள் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை என பதிலளித்தார்கள்.

பின்னர், அதை மேற்கோள் காட்டி தமிழக முதல்வருக்கு தாங்கள் சட்டமன்றத்தில் இரண்டரை கோடி பனை விதைகளை விதைப்பதற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இருப்பதாக அறிவித்திருந்தீர்கள். அதன்படி, எந்தெந்த மாவட்டத்திற்கு எவ்வளவு தொகை பனைவிதை விதைப்பதற்காக, ஒதுக்கீடு செய்தீர்கள் என, விவரம் கேட்டு இருந்தேன். அதற்க்கு வேளாண்மைத் துறையின் மூலம் எனக்கு பதில் அளிக்கப்பட்டிருந்தது. அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்றத்தில் இரண்டரை கோடி பனை விதைகள் விதைப்பதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி செய்வதாக அறிவித்து இருந்தார். ஆனால் எந்த மாவட்டத்திற்கும் பணம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என எனக்கு, வேளாண்மைத் துறையின் மூலம் பதில் அளித்து இருக்கிறார்கள்.

அப்படி என்றால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்களின் நிலை எல்லாமே, இப்படித்தான் இருக்குமோ… என நினைக்கத் தோன்றுகிறது. ஆண்டுக்கு 500 கோடிக்கும் மேல் குடிமராத்து பணிக்காக ஒதுக்கீடு செய்து கஜானாவை சுரண்டியது தான் மிச்சமோ…

குடிமராமத்து பணி திட்டத்திலேயே ஒவ்வொரு குடிமராமத்து பணியிலும் குறைந்தது ஆயிரம் பனைவிதைகள் விதைக்கப்பட வேண்டும். என அறிவித்து இருந்தால் போதுமே, தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் பனைமரங்கள் வளர்ந்து, பத்து வருடங்கள் கழித்து மக்களுக்கு பலன் தரக்கூடியதாக அமைந்திருக்கும். ஆனால், 40 லட்சம், 50 லட்சம் என செலவு செய்து குடிமராமத்து பணிகள் ஒரு வருடங்கள் கூட, அந்த பணியின் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது தான் கொடுமை.

G. பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777